*கேரள வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை மந்தம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தைக்கு, வெளி மாநில மாடுகள் வரத்து அதிகமாக இருந்தாலும், கேரள வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை மந்தமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திர மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சி சந்தைக்கு கடந்த சில வாரமாக மாடுகள் வரத்து ஓரளவு இருந்தது. அந்நேரத்தில் கேரள வியாபாரிகள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து, மாடுகளை குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர். அதுபோல் நேற்று நடந்த சந்தை நாளில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது.
அதிலும், ஏராளமான கன்றுக்குட்டிகள் விற்பனைக்காக வரிசை கட்டி நிறுத்தப்பட்டிருந்தன. கேரளாவில் வரும் 29ம் தேதி ஓணம் பண்டிகை என்பதால், கேரள வியாபாரிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. சில வியாபாரிகள் மட்டும் குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர். இதன் காரணமாக விற்பனை மந்தமாகி கடந்த வாரத்தைவிட குறைவான விலைக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
இதில் காளை மாடு ரூ.35 ஆயிரம் வரையிலும், எருமைமாடு ரூ.38 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரத்துக்கும், பசுமாடு ரூ.36 ஆயிரத்துக்கும், ஆந்திரா காளை மாடுகள் ரூ.45 ஆயிரம் வரையிலும், கன்றுக்குட்டிகள் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் என கடந்த வாரத்தைவிட ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலும் என குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. கடந்த வாரத்தில் ரூ.1.80 கோடிக்கு மாடு விற்பனை இருந்தது. ஆனால் நேற்று, ரூ.1.30 கோடிக்கு வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
500 எருமை கன்றுக்குட்டிகள் வரத்து
பொள்ளாச்சி சந்தைக்கு ஆந்திர மாநிலத்திலிருந்து எருமை மாடுகளின் எண்ணிக்கையே அதிகமானது. அதிலும், சுமார் 15 கிலோ முதல் 30 கிலோ வரையிலான, எருமை கன்றுக்குட்டிகள் சுமார் 500க்கும் மேற்பட்டவை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. பிற மாடுகள்போல், கன்றுக்குட்டிகளும் வரிசை கட்டி நிறுத்தப்பட்டு, குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.