பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் மற்றும் நவமலை பகுதியில் அவ்வப்போது அடர்ந்த வனத்திலிருந்து யானைகள் இடம் பெயர்கிறது. இதில் கடந்த சில வாரமாக, தண்ணீர் குடிக்க ஆழியார் அணை நோக்கி யானைகள் கூட்டமாக வந்து சென்றது. தற்போது மழையால், யானை நடமாட்டம் குறைந்தது. இருப்பினும், நவமலை பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை தற்போது நவமலையில் இருந்து வால்பாறை மலைப்பாதை வரை ரோட்டில் அடிக்கடி உலா வருகிறது.
தற்போது கவியருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் ஒற்றை யானை உலா வருகிறது. நேற்று, நவமலை ரோட்டில் வால்பாறை மலைப்பாதை வரை உலா வந்த ஒற்றை காட்டு யானை அங்கு உணவு தேடியது. தொடர்ந்து கவியருவி செல்லும் சாலையில் சாவகாசமாக நின்று சென்றது. நவமலைரோடு வழியாக வால்பாறை மலைப்பாதையில் அடிக்கடி ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால், சுற்றுலாதளங்களில் யானை வருவதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.