கோவை: பொள்ளாச்சி அருகே பிடிபட்ட யானை வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை வால்பாறையில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. இந்த யானை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சரளபதி பகுதியில் முகாமிட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மேலும் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் தென்னந்தோப்புக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.மக்னா யானையைப் பிடிக்க வனத்துறையினர் சரளபதி பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் . இருப்பினும் இரவு நேரங்களில் தொடர்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தியது. ஒரு சில மரங்களை வேரோடு பிடுங்கி எரிந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். மக்னா யானையை பிடிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே சேத்துமடை பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திற்குள் மக்னா யானை நுழைந்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் யானையை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது வன கால்நடை மருத்துவர் குழுவினர் அதிகாலை 4 மணியளவில் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் மக்னா யானையின் கால்களை கயிறுகளால் கட்டிய வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அந்த யானையை லாரியில் ஏற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த மக்னா யானையை வால்பாறை அருகே குடியிருப்புகள் அதிகம் இல்லாத சின்னகல்லார் வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகே பிடிபட்ட மக்னா யானை வனப்பகுதியில் விடப்பட்டது. மேலும் வனத்தில் விடப்பட்ட யானையின் நடமாட்டம் தொடர்ந்து டிரோன் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல் வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.