*பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டில், முதற்கட்டமாக மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறிவதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டுவதுடன், அவர்கள் அனைவரையும் கல்வி கற்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மூலம் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு பணிக்காக சிறப்பாசிரியர்களுக்கு, அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது 5 வயது முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் குழந்தைகளை வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, நகர் மற்றும் கிராமப்பகுதியில் அந்தந்த பகுதிகளுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் வீடுகள் தோறும் நேரில் சென்று கல்வி குறித்து முழுமையாக, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
18 வயதிற்குட்பட்ட புதிய மாற்றுத்தின் கொண்டவர்கள் உள்ளார்களா என கண்டறிந்து, அவர்களுக்கு, மருத்துவ உதவி மற்றும் தேவையான ஆவணங்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி செல்லா மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளையும், இடைநின்ற மாற்றுத்திறன் மாணவர்களையும் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளியில் சேர்த்து படிப்தற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.