லக்னோ: அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி 4 முறை முதல்வராக இருந்துள்ளார். அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதனை மாயாவதி மறுத்துள்ளார். இது குறித்து மாயாவதி தனது எக்ஸ் பதிவில், அம்பேத்கரியத்தை பலவீனப்படுத்தும் எதிரிகளின் சதிகளை முறியடிப்பதற்காக, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதே எனது முடிவாகும். அதாவது தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. ஆகாஷ் ஆனந்தை கட்சியின் வாரிசாக முன்னிறுத்தியதில் இருந்து சாதிவெறி ஊடகங்கள் இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.