Friday, April 19, 2024
Home » ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…’ டெபாசிட் காலியானாலும் கலங்காத வேட்பாளர்கள் 1951-52 முதல் இதுவரை போட்டியிட்டவர்கள் 91,160 பேர்; டெபாசிட் இழந்தவர்கள் 71,246 பேர்; மக்களவை தேர்தல் குறித்த ருசிகர தகவல்

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…’ டெபாசிட் காலியானாலும் கலங்காத வேட்பாளர்கள் 1951-52 முதல் இதுவரை போட்டியிட்டவர்கள் 91,160 பேர்; டெபாசிட் இழந்தவர்கள் 71,246 பேர்; மக்களவை தேர்தல் குறித்த ருசிகர தகவல்

by Karthik Yash

ஜனநாயக நாடான இந்தியாவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனாலும், யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை அடையாளப்படுத்த டெபாசிட் செலுத்தும் பாரம்பரியத்தை தேர்தல் ஆணையம் ஆரம்பம் முதற்கொண்டு கடைபிடித்து வருகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும். முதல் முறையாக மக்களவை தேர்தல் நடந்த 1951-52ல் டெபாசிட் தொகை பொது வேட்பாளருக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 ஆக இருந்தது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்று மக்களவை தேர்தலில் பொது வேட்பாளருக்கான டெபாசிட் தொகை ரூ.25,000, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.12,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் ஆறில் ஒரு பங்கு வாக்கு பெற்றால் டெபாசிட் திருப்பி தரப்படும். இல்லாவிட்டால், டெபாசிட் தொகையை இழக்க வேண்டியதுதான். எனவே ஒரு வேட்பாளரின் பெருமையை மதிப்பை பறைசாற்றும் சான்றாக டெபாசிட் திகழ்கிறது. ஆனால், தேர்தல் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் ஒவ்வொரு தேர்தலிலும் டெபாசிட் இழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதுவரை மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 91,160 பேரில் 71,246 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். அதாவது 78 சதவீதம் பேரின் டெபாசிட் காலி.

அதிகபட்சமாக 1996ல் மொத்த வேட்பாளர்கள் 13,952 பேரில் 12,688 பேர் டெபாசிட் இழந்தனர். அதாவது 91 சதவீதம் பேர் டெபாசிட்டை பறிகொடுத்தனர். கடந்த 2019 தேர்தலில், முக்கிய அரசியல் கட்சிகளில், பகுஜன் சமாஜ் அதிகபட்சமாக 383 வேட்பாளர்களில் 345 பேர் டெபாசிட் இழந்தனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 421 வேட்பாளர்களில் 148 பேர் டெபாசிட் இழந்தனர். பாஜகவில் தோல்வி அடைந்த 69 வேட்பாளர்களில் 51 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். சிபிஐயில் 49 வேட்பாளர்களில் 41 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

இது குறித்து தேர்தல் நிபுணர்கள் கூறுகையில், ‘‘டெபாசிட் இழப்பதை அவமானகரமானதாக யாரும் கருதுவதில்லை. இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா என அசால்டாக விட்டு மீண்டும் அடுத்த முறை களம் காண்பவர்கள் அதிகம். இப்போது பலரிடமும் பணம் இருக்கிறது. இதனால் டெபாசிட் தொகையை பெரிதாக கருதுவதில்லை. அதை இழப்பதையும் அவமானமாக எண்ணுவதில்லை. சிலர் அதிர்ஷ்டத்தை எண்ணுகிறார்கள். ஒரே ஒருமுறை ஏதோ அதிர்ஷ்டத்தில் வாக்குகளை பெற்றுவிட்டால், சுயேச்சையாக வென்று விட்டால் விட்டதை பிடித்து விடலாம் என நினைக்கின்றனர். சிலர் ஓட்டுகளை பிரிப்பதற்காக பலரை சுயேச்சையாக களமிறக்கி விடுகின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் டெபாசிட் இழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது’’ என்றனர்.

டெபாசிட் இழந்தவர்கள் விவரம்
ஆண்டு மொத்த
வேட்பாளர் டெபாசிட்
இழந்தவர்கள் சதவீதம்
1951-52 1874 745 40%
1991-92 8,749 7,539 86%
1996 13,952 12,688 91%
2009 8,070 6,829 85%
2014 8,251 7,000 84%
2019 8,049 6,922 86%

* தேசிய கட்சிகள் பரவாயில்லை
டெபாசிட்டை பாதுகாப்பதில் தேசிய கட்சிகள் பரவாயில்லை ரகம்தான். 1951-52 தேர்தலில் தேசிய கட்சிகளைச் சேர்ந்த 1,217 வேட்பாளர்களில் 344 பேர் மட்டுமே (28 சதவீதம்) டெபாசிட் இழந்துள்ளனர். 1957 தேர்தல்களில் தேசிய கட்சிகளின் 919 வேட்பாளர்களில் 130 பேர் (14%) மட்டுமே டெபாசிட் தொகையை இழந்தனர். 1977 தேர்தலில் 1,060 வேட்பாளர்களில் 100 பேர் மட்டுமே (9%) டெபாசிட் இழந்தனர்.

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi