சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு கருத்துக்களைப் பேசிக்கொண்டே இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக மியா முஸ்லிம்கள் என்று அழைக்கப்படும் பூர்வீக வங்காளி முஸ்லிம்கள் மாநிலத்தைக் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதைத் தொடர்ந்து ஒன்பது பெண்கள் உட்பட 28 முஸ்லிம்களைக் குடிமக்கள் அல்லாதவர்கள் என்று அறிவித்து அவர்களைக் கைது செய்து தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் பிஸ்வாஸ்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட கருத்துக்கு எதிர்வினையாக ஆட்சேபத்துக்குரிய அநீதியான நடவடிக்கையை அம்மாநில அரசு முன்னெடுத்து இருப்பதாகத் தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைப் பறிக்கும் இந்த அடாத செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் பலனுக்காக மக்களை பிளவுபடுத்தும் பாஜகவின் அசாம் மாநில அரசுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்களும் சமூக பற்றாளர்களும் கரம் கோர்க்க வேண்டிய முக்கிய தருணம் இது. உச்ச நீதிமன்றம் நாட்டின் நலன் கருதி உடனடியாகத் தானாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.