புதுக்கோட்டை: தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டியது அதிமுக.வின் கடமை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் அளிக்க வேண்டியது அதிமுகவின் கடமை. இது ஏற்கனவே 2024 தேர்தலில் முடிவு செய்யப்பட்டது தான். அதிமுக ராஜ்யசபா சீட்டு, தேமுதிகவுக்கு கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். இதற்காக நாங்கள் பதட்டமோ, பயமோ வேறு எந்த முடிவோ எடுக்கவில்லை. திமுக தரப்பில் கூறியபடி கமலுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கியுள்ளனர். அது வரவேற்கத்தக்கது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். வார்த்தை தான் முக்கியம். கொடுத்த வார்த்தை மீது முடிவு எடுத்தால் தான் பொதுமக்கள் அவர்களை நம்புவார்கள்.
2024 தேர்தலிலேயே 5 எம்.பி சீட்டுகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் முடிவு செய்யப்பட்ட ஒன்று. தேமுதிகவிற்கு வந்த வாய்ப்பை ஒரு முறை அன்புமணி தட்டி பறித்து விட்டார். மற்றொரு முறை ஜி.கே.வாசனுக்கும் தரப்பட்டது. அதை தேமுதிக மனதார ஏற்றுக்கொண்டது. எனவே தான் கூறுகிறோம். ஏற்கனவே முடிவு எடுத்தபடி ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு தர வேண்டியது அதிமுகவின் கடமை. அவங்க அவங்க மாநிலத்திற்கு அவங்களது தாய்மொழி பெரிது. அனைத்து மொழியும் கற்போம். ஆனால், முதலில் தமிழ் மொழி தான் கற்க வேண்டும். அதுதான் தேமுதிக நிலைப்பாடு.
இந்த சர்ச்சை பேச்சு பட ப்ரமோஷனுக்காக நடத்தப்பட்டதா என்பது குறித்து கமல்தான் விளக்க வேண்டும். அன்பு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கமலஹாசன் கூறியுள்ளார். ‘அன்பு’ என்பவர் யார் என்று கமல் விளக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஞானசேகரன் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட உள்ளது. அவருக்கு வழங்கப்படக்கூடிய அதே தண்டனை அவருக்கு பின்னால் உள்ளவர்களையும் கைது செய்து அவர்களுக்கும் வழங்க வேண்டும். நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் தான் இந்த விசாரணை நடைபெற்றது. அதனால் தான் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.
இனிவரும் தேர்தல்களில் தனித்து ஆட்சி என்பது இருக்காது. ஆட்சியில் பங்கு என்ற நிலை தான் ஏற்படும். இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆளும் கட்சி மீதும் ஆண்ட கட்சி மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இங்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வந்துள்ளதால் வரும் காலங்களில் ஆட்சியில் பங்கு என்ற நிலை தான் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அன்புமணி மீது குற்றச்சாட்டு; தாமதமாக உணரும் ராமதாஸ்
பிரேமலா விஜயகாந்த் கூறுகையில், ‘பாட்டாளி மக்கள் கட்சி பிரச்னை என்பது அவருடைய குடும்ப பிரச்னை. இதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது. பல்வேறு குற்றச்சாட்டுகளை அன்புமணி மீது ராமதாஸ் வைத்து வருகிறார். அவருக்கு மந்திரி பதவி கொடுத்ததே தவறு என்று தற்போது கூறுகிறார். காலம் கடந்த யோசனையாக தான் இதை நான் பார்க்கிறேன். இதை இப்போதுதான் அவர் உணர்ந்துள்ளார் என்றார்.