புதுடெல்லி: பழங்குடியினர் சமூகத்தை வலுப்படுத்தும் வகையில் அவர்களுக்கும் அரசியல் அதிகாரம் வழங்கப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி சமீபத்தில் தனது இல்லத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பழங்குடியினரின் பிரச்னைகள் குறித்து ராகுல் கேட்டறிந்தார். நாடு முழுவதும் காங்கிரசில் பழங்குடியின தலைமையை வளர்ப்பதற்கு விரும்புவதாக ராகுல்காந்தி தெரிவித்தார். மேலும் ராகுல்காந்தி,‘‘நான் பழங்குடியினருக்கு உதவுவதற்கு விரும்புகிறேன்.
சமூகம் ஒன்றுபட வேண்டும். பழங்குடியினரின் உரிமைகளுக்காக உண்மையில் போராடுபவர்கள் முன்வர வேண்டும். நாங்கள் பழங்குடியின தலைவர்களை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் 10-15 பழங்குடித் தலைவர்கள் உருவாக வேண்டும் என்று விரும்புகிறோம். பழங்குடியினருக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதன் மூலமாக சமூக ரீதியாக வலுப்படுத்துவதே எனது குறிக்கோள். இது காங்கிரஸ் கட்சிக்குள் அவர்களுக்கு பதவி, குரல் மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் தொடங்கும்” என்று தெரிவித்தார்.