டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி நாளை முதல் விற்பனை செய்யவுள்ளது. ஒன்றிய பாஜக அரசால் கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரிக்கை திட்டம் என்பது அரசியல் கட்சிகளுக்கு யார் வழங்கினார்கள் என்று குறிப்பிடாமலேயே நிதியை வாரி வழங்க வழிவகுக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், கடைசியாக நடந்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலில் ஒரு சதவீதத்திற்கும் குறையாமல் வாக்குகளை பெற்றிருந்தால் தேர்தல் பத்திர திட்டத்தில் நிதியை பெற முடியும். அதன்படி அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 28வது முறையாக தேர்தல் பத்திரங்களை நாளை முதல் 13ம் தேதி வரை விற்பனை செய்யவுள்ளது.
சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட 15 நகரங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் மட்டுமே தேர்தல் பத்திர விற்பனை நடைபெறும். உள்நாட்டைச் சேர்ந்த தனிநபர், இந்து கூட்டு குடும்பம், நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டோர் வரி விலக்குடன் தேர்தல் பத்திரங்கள் வாங்க தகுதி பெற்றவர்களாவர். ஆயிரம், பத்தாயிரம், 1 லட்சம், 10 லட்சம், 1 கோடி ஆகிய மதிப்புகளில் வெளியிடப்படும் தேர்தல் பத்திரங்களை பணம் செலுத்தி வாங்குவோர் பெயர்களும் வெளியில் தெரியாது. அந்த தேர்தல் பத்திரங்களை வாங்குவோர் அவர்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.
தேர்தல் பத்திரங்களின் செல்லுபடி காலமான 15 நாட்களுக்குள், அவற்றை வங்கிகளில் செலுத்தி அரசியல் கட்சிகள் பணமாக பெற்றுக்கொள்ள முடியும். 15 நாட்களுக்குள் பணமாக மாற்றாத பத்திரங்களின் கூட்டுத் தொகை, வங்கியின் மூலம் பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும். இந்த நிலையில், தேர்தல் பத்திரம் என்பது சட்டபூர்வ லஞ்சம் என குற்றம்சாட்டியுள்ள ப.சிதம்பரம், கடந்த காலங்களில் 90 விழுக்காடு நிதி பாஜகவுக்கே சென்றுள்ளதால் தற்போதும் அந்த கட்சிக்கு பொன் அறுவடையாக அமையும் என விமர்சனம் செய்துள்ளார்.