பாமகவில் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதலுக்கு காரணமாக, மாநில இளைஞரணி தலைவர் நியமன விவகாரம் என கூறப்பட்டாலும் அதன் பின்னணியில் கூட்டணி விவகாரமும் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. அதாவது ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பிய நிலையில், இரு கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் சந்திப்பின் வழியாக எடப்பாடி பழனிசாமியுடன் அவ்வப்போது நெருக்கம் காட்டி வந்தார். ஆனால் அன்புமணியோ நேர்மாறாக பாஜவுடன் அணி சேர்வதே கட்சிக்கு நல்லது என முடிவெடுத்தார். இதன் காரணமாக கடந்த 2024 மார்ச் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜ அணியில் பாமக சேர்ந்தது.
உடனே சேலம் விரைந்த ராமதாஸ், பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது தனது இருக்கைக்கு அருகில் வந்து வாங்க… வாங்க… என ராமதாசின் கையைப் பிடித்து உட்கார செய்த மோடி, சிறிதுநேரம் உரையாடினார். ஆனால் கூட்டத்தில் ராமதாசுக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர் இறுக்க முகத்துடன் இருந்தார். பின்னர் கூட்டம் முடிந்து தைலாபுரம் திரும்பினார். ஆனால் இத்தேர்தலில் தான் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பாஜ மற்றும் பாமக தோல்வியை தழுவின. அன்புமணியின் மனைவி சவுமியா தர்மபுரியில் போட்டியிட்ட நிலையில் அவரும் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
ஏற்கனவே பாமக தொடர்ந்து தேர்தல்களில் சறுக்கிய நிலையில், தான் உழைத்து வளர்த்தெடுத்த கட்சியை சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிப் படிக்கட்டில் தூக்கி நிறுத்த ராமதாஸ் தொடர்ந்து ஆசைப்பட்டாலும் மகன் அன்புமணியும், மருமகள் சவுமியாவும் பாஜவுடன் கூட்டணி வைத்தாக வேண்டுமென்ற பிடிவாதத்தால் வேறுவழியின்றி இம்முடிவுக்கு தள்ளப்பட்டதாக அப்போதே பாமகவில் தகவல்கள் கசிந்தன. இதை உறுதிபடுத்தும் விதமாக குடும்பத்திலும், கட்சியிலும் அன்புமணியால் தான் சந்தித்த சங்கடங்களையும், தனது நீண்டநாள் மனவேதனையையும் கடந்த 29ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்கள் முன்பு கொட்டினார் ராமதாஸ்.
அப்போது அவர் பேசுகையில், ‘தவறு செய்தது அன்புமணி அல்ல… 35 வயதிலேயே அவரை ஒன்றிய கேபினட் அமைச்சராக்கி தவறு செய்தது நான்தான். பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும், இல்லாவிடில் எங்களுக்கு கொள்ளி வைக்க வேண்டும் என எனது காலை பிடித்து மகனும், மருமகளும் கெஞ்சினர். மறுநாள் பாரத் மாதா கி ஜே என சத்தம்கேட்டு தான் தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை எனது தோட்டத்துக்கு வந்ததுள்ளது தெரியவந்தது. அவர்களுக்கு, தடல் புடலாக நடந்த விருந்து தொடர்பாகவும் எனக்கு எதுவும் தெரியாது’ என்று 4 சுவருக்குள் நடந்த ரகசிய உடன்பாட்டை வெளி உலகத்திற்கு கண்ணீர் மல்கியபடி நா தழுதழுத்தவாறு போட்டு உடைத்தார் ராமதாஸ்.
இந்த சம்பவத்துக்கு 2 வாரத்துக்கு முன்பு அதாவது ஏப்ரல் 11ம்தேதி ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக கூறப்பட்டது. அப்போது அதிமுக-பாஜ கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அமித்ஷா திட்டமிட்டார். அந்த நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக மற்றும் கட்சிகளின் தலைவர்களை வைத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்த அமித்ஷா திட்டமிட்டு இருந்தார். இதனால் மீண்டும் அன்புமணி மூலம் பாமக கூட்டணியை வெளியிடலாம் என்பதை கணித்து உஷாரான நிறுவனர் ராமதாஸ், அவர் வகித்த பாமக தலைவர் பதவியை பறித்தார்.
மேலும் பாமகவுக்கு நிறுவனரும் நான்தான், தலைவரும் நான்தான் என அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அன்புமணியுடன் நேரடியாக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாத நெருக்கடி பாஜவுக்கு ஏற்பட்டது. இதனால் பாமகவை கூட்டணியில் உறுதிபடுத்தும் முதல்கட்ட முயற்சி தோல்வியில் முடியவே ஒருவழியாக தமிழக பாஜ தலைவர்கள் அது உள்கட்சி விவகாரம் என சமாளிக்கவே, அமித்ஷாவும் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் அமித்ஷா மீண்டும் தேஜ கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தமிழகம் வருவதற்குள் பாமகவை சரிகட்டிவிட வேண்டுமென்பதில் தமிழக பாஜ முனைப்பு காட்டியது.
ஆனால் நேர்மாறாக பாமகவில் தந்தை, மகன் இடையிலான விரிசல் அடுத்தடுத்து அதிகரித்து, கட்சி இரண்டாக உடையும் சூழல் ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகளை தந்தை நீக்கினார். ஆனால் அன்புமணி மீண்டும் இணைத்தார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாமக பைலாவின்படி நிறுவனரான தனக்கே அதிகாரம் என்பதை நிரூபிக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனத்தை அடுத்தடுத்து கையில் எடுத்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணியோ யாரும் உங்களை நீக்க முடியாது. கட்சியின் பொதுக் குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நான்தான். நீங்கள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டால் அடுத்த 10 நிமிடங்களில் நீங்கள் அந்த பதவியில் தொடருவதாக கடிதம் வரும், தைரியமாக இருங்கள் என்று ஆதரவாளர்களிடம் கூறி வந்தார்.
பாமகவில் மோதல் இல்லாமல் ஒன்றாக கூட்டணிக்கு வந்தால் மட்டுமே முழுமையான ஓட்டுவங்கியின் பலன் கிடைக்கும் என்பதால் தந்தை, மகனை ஒன்றாக இணைக்க தமிழக பாஜ தொடர்ச்சியாக அன்புமணி மூலமாக ரகசிய முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், பாஜவினர் விரும்பியது எதுவும் நடைபெறவில்லை. இந்த சூழலில்தான் நேற்று முன்தினம் த.வா.க. தலைவர் வேல்முருகனின் சகோதரரான திருமால்வளவன் திடீரென தைலாபுரம் வந்து 14 வருடங்களுக்குபின் தனது அரசியல் ஆசானாகிய ராமதாசை சந்தித்து பேசினார்.
அப்போது நான் இங்கு வந்துள்ளதால், ராமதாசை உடனே சந்திக்க அன்புமணி வருவார் என கூறிவிட்டு சென்றார். இதேபோல் பாமகவுக்குள் நீடிக்கும் உள்கட்சி மோதலுக்கு தந்தையும், மகனும் நேரில் சந்தித்து பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்பினர். இதனிடையே நாளை (8ம்தேதி) மதுரைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதால் பாஜ, அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைத்து தேஜ அணியை பலப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராமதாசை, அன்புமணி சந்திக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி தைலாபுரத்துக்கு அன்புமணி சென்றாலும் சந்திப்பு இனிக்காமல், கசப்பில் முடிந்துள்ளது. அன்புமணி, தோட்டத்துக்கு சென்று திரும்பிய அடுத்த சில நிமிடங்களில் துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி, அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி இருவரும் ராமதாசை சந்தித்து சுமார் 3 மணி நேரம் பேசிவிட்டு திரும்பினர். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம், பாஜவுடன் பாமக கூட்டணி அமைப்பது, பாமக எதிர்கால நலன்கருதி தந்தையும், மகனும் இணைந்து செயல்படுவது என்ற விருப்பத்தை குருமூர்த்தி வெளிப்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.
இருப்பினும் பாமக நிறுவனர் ராமதாசின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது போக போகத்தான் தெரியும் என மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். ராமதாசை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என பாமக மட்டுமின்றி பாஜ வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. கணிசமான ஓட்டு வங்கி வைத்துள்ள ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைப்பார்? என்பதை தமிழக அரசியல் வட்டாரங்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. கூட்டணி அரசியல் விளையாட்டில் ஜெயிக்கப் போவது தந்தை ராமதாசா அல்லது மகன் அன்புமணியா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.