சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்: எந்த ஒரு புதிய முயற்சியை தொடங்கும்போதும் விநாயகரை வணங்கி தொடங்கப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா அனைவரது வாழ்விலும் ஆரோக்கியத்தையும், அமைதியையும், செழிப்பையும் அளிக்க வேண்டும். பாரத தேச மக்கள் அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாக கருதப்படும் வேழமுகத்து விநாயக பெருமானின் திருவருளால், நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெற்று, பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருநாவுக்கரசர் எம்பி: முழுமுதற் கடவுளாம் விநாயகர் அவதரித்த இந்நாளை விநாயகர் சதுர்த்தி என கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் மக்கள் தங்கள் இல்லத்திற்கு விநாயகர் உருவச்சிலை வாங்கி வந்து அலங்காரம் செய்து, அவருக்கு பிடித்தமான பல பலகாரங்களை செய்து படைத்து, உண்டு மகிழ்வர். காக்கும் கடவுள் கணேசன் அருளால் அனைவரது வாழ்வு சிறக்கவும், மகிழ்ச்சி பொங்கவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
டி.டி.வி. தினகரன்: எந்த ஒரு நல்ல காரியங்களை தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயக பெருமானை வணங்கி தொடங்கினால், எவ்வித தடங்களுமின்றி நிறைவாக அமையும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.வருங்காலங்களில் மக்கள் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்திலும் தடைகள் நீங்கி அவர்களது வாழ்வில் அன்பு, அமைதி, ஆரோக்கியம் செழித்திட விநாயகரின் அருள் துணை நிற்கட்டும்.