வார்சா: ஐரோப்பிய நாடான போலந்தின் அதிபராக உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் 18ம் தேதி நடந்த முதற்கட்ட வாக்கெடுப்பில் தாராளவாத வார்சா மேயர் ரபல் டிர்சாஸ்கோவ், கன்சர்வேடிவ் கட்சியின் கரோல் நவ்ரோக்கி முதல் 2 இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு இடையேயான இறுதி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில், கரோல் நவ்ரோக்கி 50.89 சதவீத வாக்குகள் பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். டிர்சாஸ்கோவ் 49.11 சதவீத வாக்குகளும் பெற்றார். 42 வயதான நவ்ரோக்கி, அண்டை நாடான உக்ரைனை நேட்டோவில் இணைவதை எதிர்ப்பதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக இருக்கிறார். இவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.