சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த வெள்ளக்கல் பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி காமாட்சி (51), சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு விஜயரதீஷ் (16), ஹாசினியா (14) என்ற மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, எஸ்எஸ்ஐ காமாட்சி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். பணி முடிந்து நள்ளிரவு 2 மணியளவில், பேளுக்குறிச்சி காவல் நிலையத்துக்கு வந்த அவர், ஓய்வு அறைக்கு தூங்க சென்று விட்டார். நேற்று காலை வெகு நேரமாகியும், காமாட்சி எழுந்து வராததால், சந்தேகம் அடைந்த போலீசார், ஓய்வறையின் கதவை உடைத்து கொண்டு, உள்ளே சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார், பேளுக்குறிச்சி காவல் நிலையத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மாரடைப்பு காரணமாக எஸ்எஸ்ஐ காமாட்சி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த காமாட்சியின் கணவர் விஜயகுமார் மற்றும் அவரது தங்கை, உறவினர்கள் பேளுக்குறிச்சி காவல் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் எஸ்எஸ்ஐ காமாட்சியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, டிஎஸ்பி விஜயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த டிஎஸ்பி, பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்பு தான், சாவுக்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தார். பின்னர், அவரது உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பணிச்சுமை காரணம் இல்லை:எஸ்பி விளக்கம்
நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பணி சுமை காரணமாக எஸ்எஸ்ஐ காமாட்சி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அது உண்மைக்கு மாறானது. எஸ்எஸ்ஐ காமாட்சிக்கு, 3 மாதத்தில் 40 நாட்கள் மருத்துவ விடுப்பும், சாதாரண விடுப்பு 2 நாட்களும், 3 நாட்கள் அனுமதி விடுப்பும், ஒரு நாள் திருமண நாள் சிறப்பு விடுப்பும் வழங்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள், காட்சி ஊடகங்களில், பெண் எஸ்எஸ்ஐக்கு சரியான விடுப்பு வழங்காமல் பணி சுமை அதிகரித்ததால், உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக வெளிவரும் செய்தி உண்மைக்கு மாறானது’ என தெரிவித்துள்ளார்.