சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார். ஒருவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால், முறையாக எப்ஐஆர் பதிவு செய்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த அஜித்குமார் வழக்கில், அதேபோல் எதையும் பின்பற்றவில்லை. அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியதன் காரணமாகத்தான், அவருடைய உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே இதை ஒரு கொலையாகத்தான் பார்க்க வேண்டியது உள்ளது. இது மிக மிக வருத்தத்துக்குரியது. வேதனைக்குரியது.
இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும், உரிய நடவடிக்கை நீதிமன்றத்தின் மூலம் எடுக்கப்படும் என்பது இந்த விசாரணையில் உதாரணமாக தெரிய வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு இதுவரையில் 25 காவல் நிலைய விசாரணை மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிகுந்த வருத்தத்துக்குரியது. இந்த அரசாங்கம் சட்டம் -ஒழுங்கு பாதுகாப்பில், மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. அதுவும் காவல் நிலைய மரணம் என்பது மிக மிக வேதனைக்குரியது. இது கண்டனத்துக்குரியது. இது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.