சென்னை: பழங்குடி இன மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தெலுங்கு படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ என்ற தமிழ் படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி, கடந்த ஏப்ரல் 26ம் தேதி ஐதராபாத்தில் நடந்தபோது பழங்குடியின மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்திருந்தார். விஜய் தேவரகொண்டா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தெலங்கானா பழங்குடி இன வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கிஷன் ராஜ் சவுகான், விஜய் தேவரகொண்டா மீது ஐதராபாத் எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், பழங்குடி இன மக்கள் குறித்து இழிவான கருத்துகளை விஜய் தேவரகொண்டா தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, மாநில பழங்குடியின மக்கள் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் நெனாவத் அசோக்குமார், விஜய் தேவரகொண்டா மீது தெலங்கானா மாநிலம் சைபராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், ‘விஜய் தேவரகொண்டாவின் பேச்சு பழங்குடி இன மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் விஜய் தேவரகொண்டா மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.