சிவகங்கை: திருப்புவனம் இளைஞரை தாக்கும் காட்சியை வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்ட போலீசார் பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபிக்கு ஆன்லைனில் சக்தீஸ்வரன் மனு அளித்திருந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் வயது 28. காரில் இருந்த நகைகள் மாயமான புகார் தொடர்பாக அவரை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ம் தேதி உயிரிழந்தார்.
இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதே சமயம், அஜித்குமாரின் விவகாரத்தில் போலீசாருக்கு உத்தரவிட்ட அந்த உயர் அதிகாரி யார்? என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
போலீசாரால் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்திருந்த கோவில் ஊழியர் சக்தீஸ்வரன், நேற்று முன்தினம் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகி வீடியோவை ஆதாரமாக பதிவு செய்தார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் அந்த வீடியோவை எடுத்த சக்தீஸ்வரன், தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்தநிலையில், சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரம் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.