‘‘இலைக்கட்சி டெல்டாவில் வென்ற தொகுதிகளை குறிவைக்கும் மலராத கட்சியின் நோக்கம் பற்றி முக்கிய நிர்வாகிகள் தலைமையிடம் முறையிட போறதா பேச்சு ஓடுகிறதே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘டெல்டாவில் இலை கட்சி வெற்றி பெற்றுள்ள தொகுதிகளை, சமீபத்தில் இலை கட்சியின் கூட்டணியில் இணைந்துள்ள மலராத கட்சி குறிவைத்து காய் நகர்த்திக்கிட்டு வருகிறதாம்.. 2026 சட்டமன்ற தேர்தலின் போது, டெல்டாவில் குறிப்பிட்ட சில தொகுதிகளை இலை கட்சியிடம் கேட்டு பெற அந்த கட்சி முடிவு செய்திருக்காம்.. இதற்கான வேலை திரைமறைவில் நடந்து வருகிறதாம்.. இதற்காக தனியாக டீம் ஒன்று செயல்பட்டு வருகிறதாம்.. இந்த தகவல் தற்போது, இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு தெரியவந்துள்ளதாம்.. தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகள் இலை கட்சியின் தலைமையை சந்தித்து பேச இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவருக்கு எதிராக இன்னும் அந்த 6 மாஜிக்களும் ரகசிய கூட்டணி வைச்சிருப்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதாக கட்சிக்காரங்க பேசுறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவருக்கு எதிராக எழுந்த மாஜிக்கள் ஆறு பேரின் அமைதிக்கு பின் சுனாமி ஒன்று பதுங்கியிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. தேனிக்காரரை கட்சியில் சேர்ப்பதுடன், மலராத கட்சியுடன் கூட்டணி அமைச்சே ஆகணுமுன்னு மேற்கு மற்றும் கொங்கு மண்டல மாஜிக்கள் இலைக்கட்சி தலைவருக்கு எதிரான ஆயுதத்தை கையில் எடுத்தாங்களாம்.. இதனை சற்றும் எதிர்பாராத இலைக்கட்சி தலைவர் கொஞ்சம் ஆடித்தான் போனாராம்.. இதனால வேறுவழி தெரியாமல் அவர்களிடம் சரணடைந்தாராம்.. ஆனால் வீறுகொண்டு எழுந்து வந்தவர்களின் நோக்கம் எடுபடாததால் மீண்டும் ஒரு தந்திரத்தை கையில் வச்சிருக்காங்களாம்.. அந்த ஆறுபேரில் ஒருவர் மேல்சபை எம்பியாக இருக்காராம்.. இவர் இன்னொரு கூட்டாளியான அதியமான் மாவட்டத்துக்காரரின் வேண்டுகோளை ஏற்று காரிமங்கலம், மாரண்டஅள்ளி ஆகிய இடங்களில் தனது மேல்சபை நிதியை கொண்டு ரெண்டு நூலகத்தை கட்டிக்கொடுத்தாராம்.. இதற்கான திறப்பு விழா தான் அதியமான் மாவட்டத்துல ஒரே பேச்சா இருக்குதாம்..
இலைக்கட்சி தலைவருக்கு கூட இவ்வளவு பிரமாண்டம் கிடையாதாம்.. 58 இடங்களில் வரவேற்பு பேனர்களை கட்டி தூள் கிளப்பிட்டாங்களாம்.. இதன்மூலம் அவர்களின் ரகசிய கூட்டணி வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க.. அந்த ஆறு மாஜிக்களும் ஒரே நோக்கத்தோடுதான் இன்னும் இருக்காங்களாம்.. வரும் தேர்தலில் தங்களின் ஆதரவாளர்களுக்கு கூடுதல் சீட் வாங்கி கொடுப்பதுடன், வெற்றிபெற வைப்பதோடு மட்டுமல்லாமல் இலைக்கட்சி தலைவர் முரண்டுபிடித்தால் அவருக்கு எதிராக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துவிடவும் முடிவு செஞ்சிருப்பதாக கட்சிக்காரங்க மத்தியில் ஒரே பேச்சா இருக்குதாம்.. அதே நேரத்துல இலைக்கட்சி தலைவருக்கு கொங்கு மண்டல விஐபிக்கள் இப்போதே நிதியை ரிலீஸ் செய்யாம முரண்டு பிடிக்கிறாங்களாம்.. விவசாயம் செஞ்சிக் கிட்டிருந்தவர் கட்சியை கைப்பற்றி ஆட்சி செய்யும்போது சிட்டிக்குள்ளாறே இருக்கும் நாங்கள் எத்தனை நாள்தான் கோஷம்போடுவது என்பதுதான் அவர்களின் கேள்வியா இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனியுடன் கூட்டணி முடிவாகாத நிலையில், ஒரு தொகுதி யாருக்குன்னு இலை கட்சிக்காரங்க இலவு காத்த கிளியாக இருக்கிறாங்களாமே எங்கே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல ஆறு காடு, குயின்பேட்டை, ரோப்கார் தொகுதிகள் பொது தொகுதியாகவும், கோணம் பாதியான தொகுதி தனித் தொகுதியாகவும் இருக்குது.. இதுல மலராத கட்சியும், இலை கட்சியும் கூட்டணி அமைச்சிருக்குற நிலையில, மாங்கனி தன்னோட கூட்டணி நிலை குறித்து எதுவும் கூறல.. மலராத கட்சி, இலை கட்சி கூட்டணியோட மாங்கனி கட்சியும் சேர்ந்தால் குயின் பேட்டை மாவட்டத்தில் உள்ள 3 பொது தொகுதிகள்ல ஒரு தொகுதியை கண்டிப்பாக கேட்கும்.. அதே நேரத்தில் குயின்பேட்டை தொகுதி இலைக் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்குற நிலையில, ஆறு காடான தொகுதியை மாங்கனி கட்சி கண்டிப்பாக கேட்கும்னு எதிர்பார்க்கப்படுது.. இதுதான் இலை கட்சியோட அடிமட்ட தொண்டர்களையும், சீட் கனவில் உள்ள நிர்வாகிகளையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்குதாம்.. கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்து, வார்டு வாரியாக பூத் கமிட்டி அமைத்து கூட்டங்களையும் நடத்தி இருக்குற நிலையில, தங்களுக்கு சீட்டு கிடைக்குமா, கிடைக்காதா என்ற நிலையில் இருக்குறாங்க ஆறுகாடு இலை பார்ட்டிகள். இலைக் கட்சியோடு மீண்டும் கூட்டணி அமைச்சா, மீண்டும் ஆறு காடான தொகுதி தங்களுக்கு தான் கிடைக்கும்னு மாங்கனி தொண்டருங்க ஆர்வத்தோட இருக்குறாங்களாம்.. அதே நேரத்தில் மாங்கனி கூட்டணி வந்தா நமக்கு சீட்டு கிடைக்காதுன்னு இலை பார்ட்டிகள் சோகத்துல இருக்குறாங்களாம்.. என்ன செய்வது ஒருவருக்கு மகிழ்ச்சி வந்தா, இன்னொருத்தருக்கு சோகம் இருக்கத்தானே செய்யும்னு கட்சிக்குள்ள பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பீப் சவுண்டுக்கே சலசலப்பானதால் விசாரணை நடத்தி அறிக்கை கேட்கிறதாமே உளவுத்துறை..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் புதுச்சேரியில் ஒன்றிய பல்கலைக்கழகம் செயல்படுது.. புதிய துணை வேந்தர் சமீபத்தில் இங்கு பதவியேற்ற நிலையில் நிகழ்ச்சி முடிந்த கையோடு அவரைவிட பவர்புல் அதிகாரியான குடியரசின் துணை தலைவர் விசிட் அடித்தாராம்.. 3 நாட்களாக புதுச்சேரியில் தங்கியிருந்த அவர் ஜிப்மரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாராம்.. அப்போது பீப் சவுண்ட் வெளியான விவகாரம் புதிய சர்ச்சை ஆகியிருக்கிறதாம்.. தனது பேச்சின்போது இடையூறாக பீப் ஒலிக்கவே, காரணம் தெரியாமல் உரையை நிறுத்திய பவர்புல் ஆனவர், இது தனக்கானதா என்ற கேள்வியையும் எழுப்பியதால் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டதாம்.. அத்துடன் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உஷாராகி பீப் சவுண்ட்டுக்கான காரணம் குறித்து தீவிரமாக அலசி ஆராய்ந்தார்களாம்.. எலக்ட்ரிக்கல் விவகாரம் என கூறப்பட்ட நிலையிலும் ஜிப்மர் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாம் ஒன்றிய உளவு.. அதன்பேரில் சிலரிடம் விசாரணை நடக்கிறதாம்.. விரைவில் அதற்கான அறிக்கையை ஜிப்மர் உளவுத்துறையிடம் சமர்ப்பிக்கப் போகுதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பதிவுத் துறை முறைகேடு அதிகாரியை வைத்து போலீஸ் அதிகாரிகளுக்கு பாடம் நடத்துனாங்களாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் மூன்றெழுத்து சார்பதிவாளர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது, லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு, போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கு, அரசு புறம்போக்கு நிலத்தை பதிவு செய்த வழக்கு உள்பட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாம். இந்த வழக்குகள் இருந்ததால் இவரை பதிவு பணியில் நியமிக்க முடியாமல் தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தி இருக்காங்க. இவரை ரெண்டு நாளுக்கு முன்னால சிபிசிஐடியில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பத்திரப்பதிவு குறித்த பாடம் எடுக்குமாறு அதிகாரிகள் அனுப்பி வைத்தார்களாம். அவரும் அங்கு சென்று அவர்களுக்கு வகுப்பு எடுத்தாராம். தற்போது, சிபிசிஐடி, டிஜிபி முதல் போலீசார் வரை அனைவருமே நமக்கு வேண்டியவர்களாகி விட்டாங்க.. இனி வழக்கை எல்லாம் தவிடுபொடியாக்கிவிடுவேன் என்றாராம். ஒருவேளை எப்படி முறைகேடு செய்றதுன்னு வகுப்பு எடுத்திருப்பாரோ என காக்கியில் கிண்டலடிக்க தொடங்கி விட்டார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
போலீஸ் அதிகாரிகளுக்கு பாடம் எடுத்த போர்ஜரி பதிவுத்துறை அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0
previous post