இம்பால்: மணிப்பூரில் பழங்குடி போராட்ட குழுவினர் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் அதிகாரி பலியானார். கடந்த மே மாதம் மணிப்பூரில் வெடித்த கொடுமையான கலவரத்தின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் மியான்மர், இந்தியா எல்லையில் உள்ள மோரே நகரில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸ் மற்றும் கமாண்டோ படைகளை அகற்றக்கோரி அப்பகுதி சமூக குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மோரே நகரின் கிழக்கு மைதானத்தில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை போலீஸ் அதிகாரி சிங்தாம் ஆனந்த் பார்வையிட்டார். அப்போது அங்கு திடீரென வந்த பழங்குடி போராட்ட குழுவினர் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.இதில் அவர் பலியானார். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. மேலும் பழங்குடியின போராட்ட குழுவுக்கு தடை விதித்து மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.