காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் செயல்படும் சி.எஸ்.எம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கண்ணியம் மிக்க போலீஸ் பணி குறித்து அறிந்து கொள்ளும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் கள விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி, அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போலீஸ் சீருடை அணிந்து வரச் செய்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம் அருகே உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கள விளக்கம் அளிக்கப்பட்டது.
போலீஸ் உடை அணிந்து காவல் நிலையத்திற்கு ஆர்வத்துடன் வந்த பள்ளி மாணவ, மாணவிகளை காவல் துறை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இன்முகத்துடன் வரவேற்று காவல் நிலையத்தை சுற்றி காட்டி விளக்கம் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் முன்னிலையில் நல்லொழுக்க அறிவுரைகள் கூறி ஆலோசனைகளை வழங்கி பாராட்டினார்கள். போலீஸ் சீருடை அணிந்து மிடுக்குடன் வந்து காவல் நிலையத்தை பார்த்து விட்டு சென்ற மாணவ, மாணவிகள் வரும் காலத்தில் தாங்களும் காவலர் பணியில் சேர்ந்து காவலர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு திரும்பி சென்றனர்.