தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் போலீசார் நேற்று வண்டிப்பேட்டையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டுக்கோட்டையிலிருந்து வந்த காரை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர். அந்த காருக்குள் 7 பண்டல்களில் 117 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து காருடன் கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்த போலீசார், காரிலிருந்த 2 பேரை அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர ராஜ பாண்டியன்(33), தவமணி(25) என்பதும், ஆந்திராவில் இருந்து சாலை மார்க்கமாக காரில் கஞ்சாவை கடத்தி சென்று அதிராம்பட்டினத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து சங்கர ராஜ பாண்டியன், தவமணி ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆந்திராவை சேர்ந்தவர் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர். கைதான சங்கர ராஜ பாண்டியன் திருச்சி திருவெறும்பூர் போலீசில் காவலராக பணிபுரிந்தார். இவர் முக்கொம்பில் காதல் ஜோடியிடம் தகராறு செய்ததுடன், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லை செய்தது ெதாடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஆவார்.