சென்னை: நெல்லிக்குப்பம் அருகே சென்னை ஆயுதப்படை பெண் காவலர், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், பட்டாலியன் காவலர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம், கொங்கராயனூர் பகுதியை சேர்ந்தவர் முகிலன்(29), கார் டிரைவர். இவரது மனைவி சோனியா(26). இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கடந்த ஒரு வருடமாக சோனியா தனியாக வசித்துள்ளார். மகளை தாயிடம் விட்டுவிட்டு ேசானியா மட்டும் சென்னை ஆவடியில் தங்கி அங்குள்ள ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் கொங்கராயனூரில் உள்ள வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனனின்றி நேற்றிரவு சோனியா உயிரிழந்தார்.
சோனியா தனது கைப்பட வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், தனது சாவுக்கு தன்னுடன் பணிபுரிந்த காவலர் ஒருவர்தான் காரணம் என எழுதி வைத்துள்ளார். அந்த நபரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றிய நெல்லிக்குப்பம் போலீசார், முகலனிடம் புகாரை பெற்று பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிந்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் துப்பு துலங்கியது. கணவர் முகிலனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்த சோனியாவுக்கு, சென்னையில் வேலை செய்தபோது, உடன் பணியாற்றிய பட்டாலியன் காவலரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த ராஜி(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் நெருங்கி பழகிய நிலையில், அவரால் சில நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டதாம். இதனால் மனஉளைச்சலில் இருந்த சோனியா விரக்தியுடன் வீடு திரும்பிய நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் இருந்த பட்டாலியன் காவலர் ராஜியை பிடித்து நெல்லிக்குப்பம் அழைத்துவந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.