திருமலை: ஐதராபாத்தில் ரூ.2 கோடி போதைப்பொருள் கடத்திய போலீஸ்காரர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் சைபராபாத் தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி நிறுத்தி அதிலிருந்த 6 பேரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை செய்தபோது, ரூ.2 கோடி மதிப்புள்ள 840 கிராம் கொகைன் போதைப்பொருள் கடத்தி செல்வது தெரியவந்தது.
தொடர்ந்து போதைப்பொருள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து காரில் இருந்தவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் குணசேகர்(40), திருப்பதி கிராமப்புறத்தைச் சேர்ந்த உன்னம் சுரேந்திரா(31), பாபட்லா மாவட்டம் கார்லபாலம் மண்டலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் டோந்தி ரெட்டி ஹரிபாபு ரெட்டி(38), அட்டங்கி மண்டலத்தைச் சேர்ந்த துரித உணவு நிர்வாகி செகுடு மெர்சி மார்கரெட்(34), ஷேக் மஸ்தான்வலி(40) மற்றும் தேவராஜு யேசுபாபு(29) ஆகியோருடன் சேர்ந்து ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் இருந்து ஐதராபாத்தில் உள்ள குகட்பள்ளிக்கு போதைப்பொருள் கடத்தி செல்வது தெரியவந்தது. போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டிய போலீஸ் கான்ஸ்டபிள் கூட்டாக சேர்ந்து கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.