ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் தேர்வுக்கான உடல்தகுதி தேர்வு ராஞ்சி, கிரிதிஹ், ஹசாரிபாக், பலமு, கிழக்கு சிங்பூம், சாஹேப்கஞ்ச் மாவட்டங்களில் உள்ள ஏழு மையங்களில் ஆகஸ்ட் 22 அன்று தொடங்கியது. ஆகஸ்ட் 30ம் தேதி வரை மொத்தம் 1,27,772 விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில் 78,023 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். செப்.9ம் தேதி வரை உடல்தகுதி தேர்வு நடப்பதாக இருந்தது. ஆனால் இதுவரை நடந்த உடற்தகுதித்தேர்வில் போது மொத்தம் 12 பேர் பலியானது தெரிய வந்துள்ளது.
பாலமுவில் உள்ள தேர்வு மையத்தில் 4 பேரும் , கிரிதிஹ், ஹசாரிபாக்கில் தலா இரண்டு பேரும், ராஞ்சியின் ஜாகுவார் மையத்திலும், கிழக்கு சிங்பூமின் மொசபானி, சாஹேப்கஞ்ச் மையங்களிலும் தலா ஒருவரும் உயிரிழந்ததாக ஐஜி (செயல்பாடுகள்) அமோல் வி ஹோம்கர் தெரிவித்தார். இதுதொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து மையங்களிலும் மருத்துவக் குழுக்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ், நடமாடும் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே போலீஸ் அதிகாரிகளின் தவறான நிர்வாகத்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாகக் கூறி, ராஞ்சியில் உள்ள ஆல்பர்ட் எக்கா சவுக்கில் ஜேஎம்எம் தலைமையிலான அரசுக்கு எதிராக பாஜ இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீஸ் தேர்வுக்கான உடல்பரிசோதனையை அடுத்த 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார். அவர் கூறுகையில்,’ போலீஸ் தேர்வில் பங்கேற்ற 12 பேர் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய சுகாதார நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இனி உடல்தகுதி தேர்வுகள் காலை 9 மணிக்குப் பிறகு நடத்தப்படாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.