மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் இச்சம்பவம் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 பேரில், பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. முன்னதாக அஜித்குமார் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு மாற்றக் கோரி, வழக்கறிஞர் மாரீஸ்குமார் உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் காவல்துறை செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, ‘‘அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக மதுரை 4வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். வழக்கில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
விசாரணை அறிக்கையை ஜூலை 8ம் தேதி இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். திருப்புவனம் இன்ஸ்பெக்டர், சிவகங்கை எஸ்பி உள்ளிட்டோர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், மதுரை மாவட்ட நீதிபதியிடம் வழங்க வேண்டும். ஜூலை 8ம் தேதி வரை அனைத்து ஆவணங்களையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மதுரை 4வது மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று தனது விசாரணையை துவக்கினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள பயணியர் விடுதிக்கு நேற்று சென்ற நீதிபதியிடம், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள், சேகரிக்கப்பட்ட தடயங்கள் உள்ளிட்டவை, சிவகங்கை மாவட்ட போலீசார் தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்களை பெற்றுக் கொண்ட நீதிபதி, புகார், எப்ஐஆர், பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரிசை எண் இட்டு, முறைப்படி லேப்டாப்பில் பதிவு செய்து ெகாண்டார். இந்த ஆவணங்களை நீதிமன்ற பாதுகாப்பில் வைத்துக் கொண்டு, தனது முதல்கட்ட விசாரணையை துவங்கி, ஐகோர்ட் கிளைக்கு அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
முதல்கட்ட விசாரணையாக, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பணியில் இருந்த உதவியாளர் சத்தீஸ்வரன், கோயில் இணை ஆணையர் அலுவலக உதவியாளர் பெரியசாமி, உதவி ஆணையரின் டிரைவர் கார்த்திக்வேல், பாதுகாவலர்கள் பிரவீண்குமார், வினோத்குமார், ஆட்டோ டிரைவர் அருண்குமார், கோயில் சிசிடிவி கண்காணிப்பாளர் சீனிவாசன், வழக்கறிஞர் கணேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து திருப்புவனம் ஏடிஎஸ்பி சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் விசாரித்தார். நகை திருட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர் மற்றும் எப்ஐஆர், காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் அடங்கிய டிவிஆர் உள்ளிட்டவை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று மட்டும் தொடர்ந்து 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார். விசாரணை இரவு வரை நீடித்தது.
இதைத் தொடர்ந்து மடப்புரம் கோயில், தனிப்படை போலீசாரின் வாகனம், அஜித்குமாரை அழைத்துச் சென்ற இடங்கள், விசாரணை நடத்திய இடங்கள், அடித்து தாக்கிய இடம் மற்றும் அஜித்குமாரின் குடும்பத்தினர், போலீசார் அடிக்கும் காட்சியை பதிவு செய்தவர், திருப்புவனம் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த கள விசாரணை முடிந்தப் பிறகு, சம்பந்தப்பட்ட காவலர்களை சிறைக்கு சென்று நேரிலும், அவர்களை சிறையில் இருந்து அழைத்து வந்து சம்பந்தப்பட்ட வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றும் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த விசாரணையின் முடிவில் தனது விசாரணை அறிக்கையை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
* மாயமான நகை எங்கே?
கார் சீட்டில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகை மற்றும் ரூ.2,500 பணம் திருடுபோனதாக நிகிதா புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் தான் போலீசார் விசாரணைக்காக அஜித்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது இந்த வழக்கின் விசாரணையில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், திருடுபோனதாக கூறப்பட்ட நகை மற்றும் பணம் என்ன ஆனது? போலீசாரால் மீட்கப்பட்டதா அல்லது நிகிதா புகார் பொய்யானதா என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, புகார் தொடர்பாக நிகிதா பேசும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் அவர் முகத்தை மறைத்தபடி பேசுவதால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
* அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணி, 3 சென்ட் இடம்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் வழங்கல்
அஜித்குமாரின் வீட்டிற்கு ஆறுதல் கூற அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று முன்தினம் சென்றார். அப்போது, உயிரிழந்த அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீன்குமார் ஆகியோரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போன் மூலம் நேரடியாகப் பேசினார். அப்போது, நடக்கக்கூடாதது நடந்து விட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சார்பில் உங்களது குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என முதல்வர் உறுதியளித்தார். மேலும், இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு, முதல்வர் கூறியபடி மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில், காரைக்குடி ஆவின் ஆலை உதவியாளர் பணிக்கான அரசாணை, மடப்புரம் அருகே தேளி ஊராட்சியில் 3 சென்ட் நிலப்பட்டா ஆகியவற்றை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேரடியாக அஜித்குமாரின் தம்பி நவீன்குமாரிடம் நேற்று காலை வழங்கினார். அப்போது தாயார் மாலதி உடனிருந்தார். மேலும், திமுக சார்பில் ரூ.5 லட்சம் பணத்தையும் அமைச்சர் வழங்கினார். அமைச்சருடன் தமிழரசி எம்எல்ஏ, கலெக்டர் பொற்கொடி, ஆர்டிஓ விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
* அதிமுக துணை நிற்கும் வீடியோகாலில் எடப்பாடி உறுதி
அஜித்குமார் வீட்டுக்கு நேற்று சென்ற அதிமுக மாஜி அமைச்சர் உதயக்குமார், எம்எல்ஏக்கள் செந்தில்நாதன், பெரியபுள்ளான், ராஜன்செல்லப்பா, முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் நேற்று வந்தனர். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வீடியோ காலில் அஜித்குமாரின் தாய் மாலதியிடம், ‘‘தைரியமா இருங்கம்மா… உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவும், நாங்களும் துணை நிற்போம். இது மீளமுடியாத துயரம். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடாகாது. அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். அஜீத்தின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்படும்’’ என்று பேசினார். முன்னதாக, அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து அதிமுக, பாஜ இணைந்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அதிமுக சார்பில் மாஜி அமைச்சர் உதயகுமார், எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், செந்தில்நாதன், பாஜ சார்பில் எச்.ராஜா மாவட்டத் தலைவர் பாண்டித்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* முதல்வர் பேசியது எங்களுக்கு ஆறுதல்- தாய் உருக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசியது குறித்து அஜித்குமாரின் தாயார் மாலதி கூறுகையில், ‘‘முதல்வர் என்னிடம் ஆறுதல் கூறினார். அப்போது தண்ணீர் கூட கொடுக்காமல் என் மகனை அடித்திருக்கிறார்கள் என்றேன். எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது, இந்த சம்பவத்துக்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறேன் என முதல்வர் கூறினார். அவர் பேசியது எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது’’ என்றார்.
* 5 போலீசார் கைது; தவாக வரவேற்பு
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ரூ.1 லட்சத்தை அஜித்குமாரின் குடும்பத்தாருக்கு வழங்கி ஆறுதல் கூறிய அக்கட்சி தலைவர் வேல்முருகன் கூறுகையில், ‘‘மனிதநேயமற்ற மரணம் இது. இனிமேல் காவல் நிலைய மரணமோ, விசாரணை மரணமோ நடைபெறாதவண்ணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 போலீசாரை கைது செய்திருப்பதையும், சிபிஐ விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டிருப்பதையும் வரவேற்கிறோம்’’ என்றார்.
* விஜய் நேரில் ஆறுதல்
தவெக தலைவரான நடிகர் விஜய் நேற்று அஜித்குமாரின் வீட்டிற்கு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த அஜித்குமாரின் படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தினரை ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதி வழங்கினார். அப்போது அவர், ‘‘நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டது. இது உங்கள் குடும்பத்திற்கு பெரும் இழப்பு. நானும், தவெக கட்சியும் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்’’ என்றார்.
* முதல்வரின் நடவடிக்கை நேர்மையை காட்டுகிறது: திருமாவளவன் பேட்டி
அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பின் விசிக தலைவர் திருமாவளவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: புலன் விசாரணையில் இருப்பவர்கள் இதுபோல அடிக்கடி படுகொலை செய்யப்படுவது இந்தியா முழுவதும் தொடர்கதையாக நீடிக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார். இந்த புலன் விசாரணையை சிபிஐ விசாரிக்கட்டும் என்று அனுமதித்திருப்பது முதல்வரின் நேர்மையை உறுதிப்படுத்துகிறது. எப்ஐஆர் பதிவு செய்யப்படாத ஒரு வழக்கில் காவல்துறையினர் புலன் விசாரணையே தொடங்கக் கூடாது என்பது தான் சட்டம். இந்த வழக்கில் விசாரித்த 5 பேருமே யூனிபார்மில் இல்லை. ஒரு புலன் விசாரணையை காவல்துறையினர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கு 11 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் வரையறுத்து இருக்கிறது. இந்த வழிகாட்டுதல்களை எந்த காவல் துறையைச் சார்ந்த அதிகாரிகளும் பின்பற்றுவது இல்லை. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.