சென்னை: மெரினா கடற்கரைக்கு வந்த மாற்றுத்திறனாளியை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற மெரினா போலீசார் 2 பேரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கதிரவன் தனது இருசக்கர வாகனத்தில் 2 நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரைக்கு வந்தார். கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மெரினா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் வெங்கடேஷ், யுவராஜ் ஆகியோர் கதிரவனை வழிமறித்து பரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது கதிரவன் நரம்பியல் பிரச்னை காரணமாக அவரால் சரியா பேச முடியவில்லை. உடனே 2 காவலர்களும், கதிரவனிடம் நீ மதுபோதையில் இருப்பதாக கூறி அவரது செல்போனை பறித்து கொண்டு பணம் கொடுத்தால் விட்டுவிடுவதாக கூறியுள்ளனர். பின்னர் கதிரவனிடம் அவரது உறவினர் தொடர்பு எண்ணை வாங்கி காவலர் வெங்கடேஷ் மற்றும் யுவராஜ் ஆகியோர் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது கதிரவன் மதுபோதையில் வந்துள்ளார் என்றும், அவரை விடுவிக்க நீங்கள் பணம் கொடுத்தால் விடுவிப்பதாக கூறியுள்ளனர். எதிர் தரப்பில் பேசிய நபர், பணம் கையில் இல்லை என்று கூறியதும், 2 காவலர்களும் மிரட்டும் வகையில் பேசியுள்ளனர்.
அதன் பிறகு கதிரவன் அவர்களிடம் இருந்து வீட்டிற்கு திரும்பி உள்ளார். பின்னர் 2 காவலர்கள் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ உடன் கதிரவன் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் படி விசாரணை நடத்த கமிஷனர் உயர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி 2 காவலர்கள் பேசிய ஆடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போது, 2 காவலர்களும் கதிரவனிடம் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறி, அவை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியது உறுதியானது. இதுகுறித்து அறிக்கை போலீஸ் கமிஷனரிடம் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து மெரினா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் வெங்கடேஷ் மற்றும் யுவராஜ் ஆகிய 2 காவலர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.