பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே நெடியம் ஊராட்சி, வெங்கம்பேட்டை கிராமத்தில் நூலுக்கு சாயம் போடும் ஒரு தனியார் சாயப்பட்டறை துவங்குவதற்கு முதல்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இங்கு சாயப்பட்டறை துவங்கினால், நீராதாரமாக விளங்கும் ஏரி நீரில் சாயங்கள் கலந்து பயனற்று வீணாகிவிடும் என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, வெங்கம்பேட்டை கிராமத்தில் தனியார் சாயப்பட்டறை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருத்தணி டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர் ஞானசேகர், எஸ்ஐ ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் வந்து, கிராம மக்களின் உண்ணாவிரத போராட்டத்தை தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கிராம மக்களிடம் திருத்தணி டிஎஸ்பி கந்தன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இக்கிராம மக்களின் கோரிக்கை குறித்து நாளை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என்று திருத்தணி டிஎஸ்பி கந்தன் உறுதியளித்தார். இதை ஏற்று கிராம மக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.