திண்டுக்கல்: காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் மானபங்கம் செய்து துன்புறுத்தப்பட்ட வழக்கில், ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர், 2 போலீசுக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி, அவரது மனைவியை, கடந்த 20.2.2001ம் ஆண்டு செம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணைக்காக நள்ளிரவு அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீசார், பெண்ணின் உடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்து லத்தியால் தாக்கி விசாரணை செய்ததாக தெரிகிறது. பின்னர் காலையில் அழைக்கும்போதெல்லாம் விசாரணைக்கு வர வேண்டும் என இருவரையும் போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர். இதில் மனமுடைந்த கணவன், மனைவி இருவரும் தற்கொலைக்கு முயன்றனர். இதில் சிகிச்சை பலனின்றி 25.2.2001ல் கணவன் உயிரிழந்தார். புகாரின்பேரில் 40க்கும் மேற்பட்டோரிடம், ஆர்டிஓ விசாரணை செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு விசாரணை திண்டுக்கல் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீபா நேற்று அளித்த தீர்ப்பில், செம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ரங்கசாமி (77), போலீஸ்காரர்களாக இருந்த வீரதேவர் (68), சின்னதேவர் (69) ஆகியோருக்கு தலா 9 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தற்போது மூவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.