கான்பூர்: ரசிகர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் குல்தீப் யாதவின் வீட்டிற்கு கான்பூர் போலீசார் பாதுகாப்பு போட்டுள்ளனர். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்தில் இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்தது. ஆனால் வீரர் குல்தீப் யாதவ் இரண்டாவது ரன் ஓடும் எண்ணத்தில் இல்லாமல் நிற்க, முகமது சிராஜ் சொன்னவுடன் தான் மீண்டும் ஓடத் தொடங்கினார். இதன் காரணமாக அவர் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இதனால் கடுப்பான முகமது சிராஜ், குல்தீப் நோக்கி கத்தி திட்டினார். அதன்பின் ஆடிய ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது.
அதனால் நாட்டின் பல இடங்களில் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்தப் போட்டியை இந்திய அணி அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் மீது ரசிகர்கள் எந்தவித அதிருப்தியும் காட்டக்கூடாது என்பதால், இந்திய அணியின் வீரர்களின் வீடுகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்துள்ள டிஃபென்ஸ் காலனியில் குல்தீப் யாதவின் வீடு அமைந்துள்ளது.
குல்தீப் யாதவ் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருப்பதால், அவரது வீட்டிற்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளதாக வந்த தகவலையடுத்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குல்தீப் யாதவின் வீட்டிலும் அமைதி நிலவுகிறது. யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதுகுறித்து ஜாஜ்மாவ் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அரவிந்த் சிசோடியா கூறுகையில், ‘குல்தீப் யாதவின் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக எவ்வித எதிர்ப்பு போராட்டங்களும் நடக்கவில்லை. அவரது வீட்டினரும் பாதுகாப்பு கோரவில்லை. இருந்தாலும் எங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்’ என்றார்.