கோவை: ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவை மாநகர போலீசாருக்கு பேட்டரியில் இயங்கும் ‘டிரைக் பைக்’ என்ற 3 சக்கர ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ‘டிரைக் பைக்’ தனியார் கல்லூரி நிர்வாகத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ரோந்து செல்லும் போலீசார் நின்றபடிதான் செல்ல முடியும். ஒயர்லெஸ் கருவி பொருத்தும் வசதி உள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நேற்று இந்த பைக் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அந்த வாகனத்தை ஓட்டி பார்த்தார். மாநகரில் உள்ள சிறிய தெருக்களில் இந்த வாகனத்தை பயன்படுத்தி ரோந்து பணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.