நூஹ்: நூஹ்வில் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் நூஹ் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. 15 மடாதிபதிகள் கோயிலில் ஜலாபிஷேகம் நடத்தினர். அரியானாவில் உள்ள நூஹ்வில் கடந்த மாதம் நடந்த விஷ்வ இந்து பரிஷத் பேரணியின் போது கலவரம் வெடித்தது. இதில், 6 பேர் பலியாயினர். இந்த கலவரம் அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட நூஹ்வில் அனைத்து சமுதாய இந்து மகாபஞ்சாயத்து சார்பில் 28ம் தேதி( நேற்று) ஷோபா யாத்திரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. யாத்திரைக்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி யாத்திரை நடக்கும் என அறிவிக்கப்பட் டதால் பதற்றம் ஏற்பட்டது.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள், வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாவட்ட எல்லைகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். மொத்தம் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர 24 கம்பெனி துணை ராணுவ படை வீரர்களும் குவிக்கப்பட்டனர். ஷ்ராவண் மாதத்தின் கடைசி திங்கள்கிழமை என்பதால் பக்தர்கள் மட்டும் நல்ஹர் சிவன் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அயோத்தியை சேர்ந்த மடாதிபதியான ஜகத்குரு பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் நூஹ் நகருக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதை கண்டித்து வர் உண்ணாவிரதம் இருந்தார். பரமஹம்ச ஆச்சார்யா கூறுகையில்,‘‘ நல்ஹர் சிவன் கோயிலில் ஜலாபிஷேகம் செய்வதற்காக சரயு நதியில் இருந்து புனித நீரை கொண்டு வந்தேன். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினர்’’ என்றார். நூஹ் மாவட்ட கலெக்டர் கூறுகையில்,‘‘ 15 மடாதிபதிகள் மற்றும் சில இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டும் சிவன் கோயிலில் ஜலாபிஷேகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்’’ என்றார்.