மதுரை: இரண்டு நாள் போலீஸ் விசாரணை முடிந்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யூடியூபர் சங்கர், தன்னை ேபாலீசார் துன்புறுத்தவில்லை என்று வாக்குமூலம் அளித்தார். பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான யூடியூபர் சங்கர், முன்னதாக தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி தனியார் விடுதியில் தங்கியிருந்த அறையில் இருந்து கஞ்சா பறிமுதல் வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரிடம் பழனிசெட்டிபட்டி போலீசார், நீதிமன்றம் அனுமதியுடன் கடந்த 2 நாளாக காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்ததையடுத்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப்பின் மதுரை போதைப்பொருள் நீதிமன்றத்தில் சங்கரை நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதியிடம் யூடியூபர் சங்கர், விசாரணையின்போது போலீசார் என்னை துன்புறுத்தவில்லை என வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரது காவலை ஜூன் 5ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த ஒரு வழக்கறிஞர், ‘தேவர் குறித்து அவதூறாக பேசிய சங்கர் ஒழிக, ஒழிக’ என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சங்கரின் ஜாமீன் வழக்கு விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.