குண்டூர்: வேகமாக பைக் ஓட்டியதால் நடு ரோட்டில் 3 இளைஞர்களை உட்காரவைத்து லத்தியால் சரமாரியாக போலீஸ் அடித்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி நகரில், மூன்று தலித் இளைஞர்கள் நடு ரோட்டில் உட்கார வைக்கப்பட்டு, காவல்துறையினர் லத்தியால் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த இளைஞர்கள் வேகமாக பைக்கை ஓட்டியதாகவும், போக்குவரத்து காவலர் ஒருவரைத் தாக்கியதாகவும் காவல்துறை குற்றம்சாட்டியது. இதையடுத்து, காவலர்கள் பொதுமக்கள் முன்னிலையில் இவர்களை அடித்து, அவர்களின் கால்களை லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், போலீசாரின் நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிகழ்வு மனித உரிமை மீறல் என்று கண்டிக்கப்பட்டு, காவல்துறையின் செயல்பாடு சட்டத்திற்கு புறம்பானது என்று எதிர்க்கட்சிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு, இதுகுறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவர், ஆந்திர ஆளுநர், பிரதமர் அலுவலகம் ஆகியோருக்கு சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.