புதுடெல்லி: நீதிபதியின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தை காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று துணை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் பேசுகையில், ‘டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட கணக்கில் வராத பணம் தொடர்பான விவகாரத்தை காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மீது வழக்கு தொடர முன் அனுமதி தேவை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை விசாரிக்கும் மூவர் உள்ளகக் குழு, சாட்சிகளிடமிருந்து மின்னணு உபகரணங்களை மீட்டது என்பது மிகவும் தீவிரமான பிரச்னையாகும்.
எவ்வாறு இது நடந்தது? கடந்த மார்ச் 14 மற்றும் 15ம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் நடந்த இந்த சம்பவம், ஒரு வாரம் கழித்தே 140 கோடி மக்களைக் கொண்ட நாட்டிற்கு தெரியவந்தது. இதுபோன்ற பல சம்பவங்கள் வெளியே தெரியாமல் இருக்கலாம். இதுபோன்ற ஒவ்வொரு ஒழுங்கு மீறலும் சாமானிய மக்களையும், சட்டத்தின் ஆட்சியை நம்புவோரையும் பாதிக்கிறது. குற்றவியல் நீதி அமைப்பு ஏன் செயல்படவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் மட்டுமே காவல்துறை விசாரணையிலிருந்து விலக்கு பெறுகின்றனர். அதுவும் அவர்கள் பதவியில் இருக்கும்போது மட்டுமே இந்த விதிகள் செயல்பாட்டில் இருக்கும். உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தின் பின்னணி என்ன? எந்த நோக்கத்திற்காக அங்கு பணம் வந்தது? இந்த சம்பவம் நீதித்துறையை மாசுபடுத்தியதா? பெரிய முதலைகள் யார்? இதை நாம் கண்டறிய வேண்டும்.
ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. கடந்த 1991ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஜனநாயக நாட்டில், எந்தவொரு நபரையோ அல்லது நிறுவனத்தையோ விசாரணையிலிருந்து விலக்கி வைப்பது ஆபத்தானது. ஜனநாயகத்தை வளர்க்க வேண்டுமானால், ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு நபரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று அவர் கூறினார். ஏற்கனவே உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா உள்ளிட்ட உச்ச நீதிமன்றம் தொடர்பான விவகாரங்களில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சில கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.