சென்னை : மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஒரு காவல்துறை மையம் அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நாட்டில் உள்ள மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை அமல்படுத்தியது தமிழக அரசு.
தமிழ்நாட்டில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் 2 முறை நடந்த ஆலோசனையில் புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு, மாவட்ட அதிகாரி, வருவாய் நிர்வாக அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு மருத்துவ, ஊரக நலப்பணி இயக்குநர் ராஜமூர்த்தி சுற்றிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், “மருத்துவமனை பணியாளர் பாதுகாப்புக்காக ஆலோசனை, பாதுகாப்பு என 2 கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதி, அடையாள அட்டை கொடுக்க வேண்டும். மருத்துவமனையில் இரவு நேர பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனையைச் சுற்றி மின்விளக்குகள் அமைக்க வேண்டும். மருத்துவ பணியாளர்களை தாக்கினால் மருத்துவ பணியாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என பதாகை வைக்க வேண்டும். மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஒரு காவல்துறை மையம் அமைக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட உத்தரவுகளை உடனே அமல்படுத்த வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.