மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கோட்டையூர் அடுத்த களப்பால் கிராமத்தை சேர்ந்த கோவை தொழிலதிபர் பாஸ்கரன் (48), கடந்த 2013ல் களப்பால் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதில் நடுவக்களப்பால் விவசாயி மாரிமுத்து (54), முக்கிய குற்றவாளி என்பதால் பழிக்கு பழியாக அவரது நெருங்கிய உறவினர்களால் கடந்த 9ம்தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து களப்பால் போலீசார் வழக்கு பதிந்து நடுவக்களப்பால் கிராமத்தை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். இதில் தேடப்பட்ட வலங்கைமான், பாடகச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி மாதவன் (24) என்பவரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு ரயில்வே மேம்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவலின் பேரில் போலீசார் நேற்று காலை அங்கு சென்றனர். போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு வலது கை மற்றும் இடது கால் முறிந்தது. போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பிரபல ரவுடி மாதவன் மீது நீடாமங்கலம் இந்திய கம்யூ பிரமுகர் நடேச தமிழார்வன் கொலை உள்பட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளது.