அண்ணாநகர்: காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட 3 மணி நேரத்தில் மாயமான சிறுவனை மீட்டுக்கொடுத்த போலீசாரை மக்கள் பாராட்டினர். சென்னை முகப்பேர் 4வது பிளாக்கை சேர்ந்தவர் தினகரன்(42). இவரது மகன் சுஜித்(8). இவர் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஓணம் பண்டிகை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டின் அருகே உள்ள டியூஷன் சென்டருக்கு படிக்க சென்றுவிட்டு மதியம் 1 மணி அளவில் வீட்டுக்கு வந்துள்ளார். இதன்பிறகு வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டி விளையாட சென்றவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சுஜித்தை பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின்படி, நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். உடனே தனிப்படை அமைத்து சிறுவனை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. அந்த பகுதி முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சிறுவனின் நண்பர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளாரா என்றும் தேடியபோது சிறுவன் வேகமாக சைக்கிள் ஓட்டி செல்வதை பார்த்து உடனடியாக அந்த சிறுவனை மடக்கிப்பிடித்து விசாரித்தபோது காணாமல்போன சுஜித் என தெரியவந்தது. அந்த சிறுவனை மீட்டு காவல்நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரணைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மகன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், ஆனந்த கண்ணீர் வடித்தனர். புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்டு கொடுத்ததால் போலீசாருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்துக்கொண்டனர். போலீசாரை பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.