பழநி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வந்து, திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு குவிந்த பாஜ கட்சியினர் கோஷமிட ஆரம்பித்தனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்ற பழநி டிஎஸ்பி சரவணனை, பாஜ மாவட்டத்தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் மார்பில் அடித்து கீழே தள்ளினர்.
இந்நிலையில், பாஜவினர் மீது கைவைத்தால் தொலைத்து விடுவோம் என்று கூறி மிரட்டியதாகவும் கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார், பழநி டவுன் போலீசில் பாஜவினர் மீது புகார் அளித்தார். இவரது புகாரின் பேரில் போலீசார் பாஜ மாவட்டத் தலைவர் கனகராஜ், நகர செயலாளர் ராமச்சந்திரன் உட்பட 120 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.