பல்லாவரம்: வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்தூர் தனியார் கல்லூரி அருகே உள்ள சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை போலீசார் பணியில் இருந்தனர். அப்போது, போதையில் 2 வாலிபர்கள் சாலையில் படுத்து தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவலர்கள் சின்னசாமி மற்றும் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு 2 பேர், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் படுத்துக் கிடந்தனர்.
அவர்களது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர். இதனால், ஆத்திரமடைந்த 2 பேரும் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு, அவர்களின் சட்டையை பிடித்து இழுத்து, தாக்கிவிட்டு, அவ்வழியாக சென்ற ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றனர். விசாரணையில், போதை ஆசாமிகள் இருவரும் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை, காவாங்கரை தெருவை சேர்ந்த பவானிசங்கர் (29), அவரது அண்ணன் மாரிமுத்து (31) என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.