மதுரை: காவல் நிலையத்தில் புகார் தர வந்தவரிடம் 32 சவரன் நகை வாங்கிக் கொண்டு மோசடி செய்த பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விவாகரத்து புகாரில் திருமங்கலம் காவல் ஆய்வாளர் கீதா, பறிமுதல் செய்த 32 சவரன் நகைகளை ஒப்படைக்காததால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜேஷ்குமார் என்பவருக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த அபிநயாவுக்கும் திருமணம் நடந்தது. அபிநயா என்பவர் விவாகரத்து கோரி திருமங்கலம் மகளிர் காவல் ஆய்வாளர் கீதாவிடம் புகார் அளித்துள்ளார்.
திருமணம் ஆன இரண்டு மாதங்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரலில் விவாகரத்து கோரி அபிநயா புகார் அளித்தார். தான் அணிந்து வந்த 102 சவரன் நகைகளை மீட்டு தரக் கோரி ஆய்வாளர் கீதாவிடம் அபிநயா தெரிவித்தார். அபிநயா புகாரின்பேரில், ராஜேஷ் குமாரிடமிருந்து 102 சவரன் தங்க நகையை ஏப்ரல் மாதமே கீதா கைப்பற்றினார்.
அபிநயாவிடம் நகைகளை கொடுக்காமல் ஆய்வாளர் காலம் தாழ்த்தி வந்தார். நகைகளை அபிநயாவிடம் ஒப்படைக்காதது குறித்து ராஜேஷ் குமார் மதுரை டி.ஐ.ஜி ரம்யா பாரதியிடம் புகார் அளித்தார். டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, 70 சவரன் தங்க நகைகளை அபிநயாவிடம் ஆய்வாளர் கீதா ஒப்படைத்தார். எஞ்சிய 32 சவரன் தங்க நகைகளை ஒப்படைக்காமல் இருந்ததை அடுத்து ஆய்வாளர் கீதா கைது செய்யபப்ட்டுள்ளார்.