Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் சடலம் தலைநகரில் தலையைத் தேடி அலையும் போலீசார்: கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபர் பற்றி துப்புதுலக்க முடியாமல் தனிப்படை திணறல்

சென்னை: பெரம்பூர் ரயில்நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட உடலுக்குச் சொந்தமான தலையை தேடி தலைநகர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். ஆனால் தலை கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். சென்னை நகரில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2024ம்ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டு வாசலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து அப்போதைய சென்னை மாநகர ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். இதன்பின்பு கொலை சம்பந்தமாக 30 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டார். சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணா ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளனர். மீதி இருந்த 27 பேரில் ரவுடி நாகேந்திரன் உயிரிழந்துவிட்டார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு சென்னையில் குற்றங்கள் பெருமளவில் குறைந்தது. சிறிய, சிறிய சம்பவங்கள் நடந்தாலும், பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் பெரம்பூர் ரயில்நிலையத்தில் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 8 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலைய நடைமேடை எண் 4ல் கேட்பாரற்று ஒரு சூட்கேஸ் கிடந்தது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் வந்து சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் தலை இல்லாமல் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்தது. உயரதிகாரிகள் மற்றும் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பெரம்பூர் இருப்பு பாதை காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பெரும்பாலான ரயில்நிலையங்களில் போதிய அளவு சிசிடிவி கேமரா இல்லை என்பது தெரியவந்தது. பெரம்பூர் ரயில் நிலையத்திலும் குறைந்த அளவே சிசிடிவி கேமரா மட்டுமே உள்ளது. இதன்காரணமாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்த வாலிபரின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்றது. இறந்தவர் தலை துண்டிக்கப்பட்டு 2 கைகளும் முட்டி வரை சதைப்பகுதி கிழிக்கப்பட்டு எலும்பு தனியாகவும் 2 கால்களும் முட்டிவரை சதை பகுதி முழுவதும் கிழிக்கப்பட்டு எலும்பு தனியாகவும் மிகக் கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சமீப நாட்களில் இப்படி ஒரு கொடூர கொலை சம்பவம் நடந்தில்லை.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போதிய துப்பு கிடைக்காததால் சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்ட 4வது நடைமேடையில் பெரும்பாலும் சென்ட்ரல், பீச் ரயில் நிலையங்களில் இருந்துவரும் மின்சார ரயில்கள் பெரம்பூரில் நின்று திருவள்ளூர், அரக்கோணம் செல்கிறது. எனவே பீச், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள கேமராக்கள் மற்றும் அந்தந்த ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு முன்பு எந்தெந்த பகுதியில் நின்று செல்லுமோ அந்த ரயில் நிலையங்களில் உள்ள கேமராக்கள் என பல்வேறு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுசம்பந்தமாக பெரம்பூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் உத்தரவின்படி, புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் எம்கேபி.நகர் உதவி கமிஷனர் சரவணன், புளியந்தோப்பு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, 5 இன்ஸ்பெக்டர்களை கொண்ட 5 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கமாக கொடூரமாக கொலை செய்தால் அந்த கொலையை மறைப்பதற்கு கொலையாளிகள் முயற்சி செய்வார்கள். ஆனால் இந்த கொலையை பொறுத்தவரையில் கொடூரமாக கொலை செய்துவிட்டு அந்த உடலை சூட்கேசில் வைத்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பெரம்பூர் ரயில் நிலைய நடைமேடையில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். அப்படியென்றால், கொலையாளிகள் போலீசாருக்கோ, சமூகத்திற்கோ எதையோ ஒன்றை அடையாளம் காட்ட விரும்புகிறார்கள் என்றே தெரிகிறது. காவல்துறையினர் மீது முன்பு இருந்த பயம் தற்போது கொலையாளிகளுக்கும் ரவுடிகளுக்கும் இல்லை என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது.

இதனிடையே இந்த கொலையில் எப்படியாவது குற்றவாளிகளை கண்டுபிடித்து விடவேண்டும் என்று போலீசார் முனைப்பு காட்டி அந்த வாலிபரின் தலையைத் தேடி கடந்த இரண்டு நாட்களாக அலைந்து வருகின்றனர். தலை கிடைத்துவிட்டால் இந்த வழக்கில் துப்பு கிடைக்கும் என்று போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் இதுவரை தலை கிடைக்கவில்லை. தலை கிடைத்தால்தான் கொலையானவர் யார் என்று தெரியவரும். அதன்பின்னர்தான் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும். ஆனால் தலையே கிடைக்கவில்லை. இதனால் தலைநகரான சென்னையில் போலீசார் தலையை தேடி அலையும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சென்னை மற்றும் மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். அவர்களின் உடல் இதுவாக இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் தலையில்லா உடல் மட்டும் கண்ெடடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மக்களிடம் ஒருவித அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.