பண்ருட்டி : மூதாட்டியை தாக்கி பலாத்காரம் செய்த வாலிபர், 2 காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதை கழிக்க அதே பகுதியில் உன்ன சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு போதையில் வந்த ஒருவர் திடீரென மூதாட்டியை தாக்கிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மூதாட்டி அணிந்திருந்த நகையையும் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி போலீசார் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து எஸ்.பி. ஜெயக்குமார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடும் பணியை முடுக்கிவிட்டார். இந்நிலையில் கும்பகோணம் சாலையில் உள்ள முந்திரி தோப்பில் குற்றவாளி பதுங்கியிருப்பதாக பண்ருட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்தவரை ஏட்டுக்கள் குபேந்திரன், அரிகரன் ஆகியோர் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் திடீரென 2 போலீசாரையும் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். உடனே இன்ஸ்பெக்டர் வேலுமணி துப்பாக்கியால் அவரது இடது காலில் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார்.
பின்னர் அவரை பிடித்து விசாரித்தபோது எஸ்.கே.பாளையத்தை சேர்ந்த பழைய குற்றவாளி சுந்தரவேல் (24) என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி ஜெயக்குமார் காயமடைந்த 2 போலீசாரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். 2 காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற பாலியல் குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்த சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.