சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீடு அருகே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 6 வழக்கறிஞர்கள் உள்பட 23பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கொலைக்கு மூளையாக செயல்படும் நாகேந்திரன் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக உள்ளார். இந்த நிலையில், அவரை நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதனடிப்படையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மத்திய வேலூர் சிறைச்சாலையில் இருந்து நாகேந்திரனை சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து கொண்டு வருகின்றனர்.
இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்க்கும், நாகேந்திரனுக்கும் நேரடியாக என்ன மோதல் உள்ளிட்ட விவரங்கள் இந்த விசாரணை முடிவிலேயே தெரியவரும். சென்னை எழும்பூர் ஆயுதப்படை மைதானத்தின் பின்புறம் உள்ள ரவுடிகள் ஒழிப்பு காவல் நிலையத்தில் நாகேந்திரனை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இவர் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு தேவையான மருத்துவ உதவுங்கள் செய்யவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.