சென்னை: சென்னை நகரில் பாதுகாப்புக்காக 3 அம்ச திட்டத்தை, அதிகாரிகள் கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் அருண் அறிவித்துள்ளார். சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்கள் கண்ணன் (தென் சென்னை), நரேந்திரன் நாயர் (வடசென்னை), இணை கமிஷனர்கள் பர்வேஷ்குமார், விஜயகுமார், சிபி சக்கரவர்த்தி, சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் துணை கமிஷனர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த காலங்களில் ஒரு குற்றச் சம்பவங்கள் நடந்தால், சம்பவ இடத்துக்கு அந்தப் பகுதியின் போலீசார் மட்டுமே செல்வார்கள். அவர்கள்தான் முதல் கட்ட விசாரணை நடத்துவார்கள். பெரிய சம்பவமாக இருந்தால் அந்தப் பகுதிக்கு உதவி கமிஷனர், துணை கமிஷனர், இணை கமிஷனர், கூடுதல் கமிஷனர் செல்வார்கள். தேவைப்பட்டால் கமிஷனரும் செல்வார்.
உதாரணத்திற்கு பெரம்பூரில் பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்தவுடன் செம்பியம் போலீசார் சென்றனர். அதன்பின்னர் உதவி கமிஷனர் முதல் கூடுதல் கமிஷனர் வரையிலான அதிகாரிகள் சென்றனர். போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினாலும், குற்றவாளிகள் பெரம்பூரில் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
சென்னையில் பல இடங்களை கடந்து குறிப்பாக, நெரிசலான பகுதிகளை கடந்து, தப்பிச் சென்று விட்டனர். போலீசாரால் கொலையாளிகளை பிடிக்க முடியவில்லை. ஆனால் இரவில்தான் அவர்கள் சரண் அடைந்தனர். இது குறித்து, புதிய போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டவுடன் ஆய்வு செய்துள்ளார். அப்போது, கொலையாளிகள் பல பகுதிகளுக்கு தப்பிச் செல்லும்வரை வாகன சோதனை நகரில் நடைபெறவில்லை என்று தெரியவந்தது. இதனால் குற்றவாளிகள் எளிதில் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றுவிட்டனர் என்றும் தெரிந்தது.
இதனால் சென்னை நகரில் ஒரு குற்றச் சம்பவம் நடந்தால் போலீசார் எப்படி வாகன சோதனை நடத்த வேண்டும், எப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், குற்றவாளிகளை எப்படி கைது செய்ய வேண்டும் என்று முக்கிய முடிவுகளை போலீஸ் கமிஷனர் அருண் அறிவித்துள்ளார். அதில், சென்னை நகர பாதுகாப்பு ரெட், யெல்லோ, ஆரஞ்சு என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதச் செயல்களோ, தீவிரவாதிகள் போன்றவர்கள் குறித்த தகவல்களோ கிடைத்தவுடன், போலீஸ் மைக்கில் சம்பவம் குறித்து எந்த விபரத்தையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தெரிவிக்க மாட்டார்கள். வெறும் ரெட் அலர்ட் என்று சம்பவ இடம் குறித்த விபரத்தை மட்டுமே குறிப்பிடுவார்கள்.
உடனே தீவிரவாதிகள் தொடர்பான பிரச்னை என்பதை உணர்ந்து, கமிஷனர் முதல், அந்தப் பகுதியின் இன்ஸ்பெக்டர் வரையிலான அதிகாரிகள் கண்டிப்பாக சம்பவ இடத்துக்கு சென்றாக வேண்டும். சம்பவம் நடந்த நேரம் உடனடியாக தெரிவிக்கப்படும் என்பதால், சம்பவ பகுதியில் இருந்து சுமார் குறைந்தது 5 கி.மீ.தூரம் வரை உள்ள பகுதிகளின் எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் முதல் துணை அல்லது இணை கமிஷனர்கள் வரையிலான அதிகாரிகள் அவர்களது எல்லைக்குள் உள்ள முக்கியமான பகுதிகளுக்கு உடனடியாக துப்பாக்கியுடன் சென்று, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வந்திருக்க வேண்டும்.
தேவைக்கேற்ப வாகன சோதனை, தெருத்தெருவான ரோந்து, ஓட்டல்கள், லாட்ஜ்கள் சோதனைகள் உள்பட அனைத்து வகையான நடவடிக்கைகளை மின்னல் வேகத்தில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். கமிஷனரோ மற்ற அதிகாரிகளோ ெசான்னால்தான் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று நினைத்து இருந்து விடக்கூடாது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து அலர்ட் கொடுத்தவுடன் தங்களுக்கான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வந்து விடவேண்டும். அதேபோல, யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டால், முக்கியமான நபர் அல்லது முக்கியமான பெரிய ரவுடி அல்லது முக்கிய பிரமுகர் கொலை அல்லது பெரிய அளவிலான கொள்ளை நடந்திருப்பதாக கருதி சம்பவ இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை உள்ள பகுதிகளுக்கு சம்பவ இடத்தில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரிகள் தவிர மற்ற அதிகாரிகள் அனைவரும் வந்து, அந்தப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். குறிப்பாக கூடுதல் கமிஷனர் எல்லைக்குள் உள்ள அதிகாரிகள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டால், செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பதாக அர்த்தம். கட்டுப்பாட்டு அறையில் இருந்து மைக்கில், ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சொல்லி ஆரஞ்சு அலர்ட் என்று கூறினால், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து காவல் மாவட்ட எல்லை முழுவதும் உள்ள இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள் தங்கள் எல்லைக்குள் உள்ள பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அதற்கு ஏற்றாற்போல வாகனச் சோதனையில் ஈடுபட வேண்டும்.
ஒரு குற்றம் நடந்தால் சில நிமிடங்களிலோ, அல்லது குறிப்பிட்ட எல்லையை அவர்கள் தாண்டுவதற்குள்ளோ போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ய வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால், எவ்வளவு பெரிய குற்றங்களை செய்தாலும் தப்பிச் செல்ல முடியாது. அதேநேரத்தில் குற்றவாளிகள் ஆயுதங்கள் வைத்திருக்கலாம். அதற்கு தகுந்த வகையில் முன்னெச்சரிக்கையுடன் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஒரு குற்றவாளி கூட தப்பிவிடாமல் பிடிக்க முடியும். இந்த 3 பாதுகாப்பு அம்சங்களையும் போலீசாரும், போலீஸ் அதிகாரிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் போலீஸ் கமிஷனர் அருண் அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.
உண்மையை சொன்னால் கேட்ட இடத்துக்கு டிரான்ஸ்பர்
சென்னை நகரில் பணியாற்றும் போலீசாரோ, அதிகாரிகளோ, நீங்கள் விரும்பும் இடத்துக்கு பணி மாறுதல் வேண்டும் என்றால், அதற்கான உண்மையான காரணத்தைக் கூறி பணி மாறுதல் கேட்டால் உடனடியாக வழங்கப்படும். இதற்காக ரெகமன்டேஷன் எல்லாம் தேவையில்லை. நீங்களே உரிய அதிகாரிகளையோ, கமிஷனரையோ அணுகலாம். அதேநேரத்தில், கொடுக்கல் வாங்கல் அல்லது கந்து வட்டியில் ஈடுபடுகிறவர்கள், பான்புரோக்கர் தொழில் செய்கிறவர்களுடன் சில போலீசாரும் அதிகாரிகளும் தொடர்பு வைத்துக்கொண்டு பொதுமக்கள் மீது தவறான நடவடிக்கை எடுப்பதாக புகார்கள் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகள், போலீஸ் வேலையை மட்டுமே பார்க்க வேண்டும் என்று கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்தார்.