வார்சா: போலந்து நாட்டில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, உக்ரைனுக்கு சொகுசு ரயிலில் நேற்றிரவு புறப்பட்டார். போர் சூழலுக்கு மத்தியில் தலைநகர் கீவ்வில் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பயணத்தின் முதல் கட்டமாக போலந்து தலைநகர் வார்சா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி தங்கிய ஓட்டலுக்கு இந்திய வம்சாவளியினர் ஏராளமானோர் வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பயணத்தின் 2வது நாளான நேற்று பிரதமர் மோடி, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கடந்த 2022ல் ரஷ்யா-உக்ரைன் போர் மூண்ட போது, உக்ரைனில் படிக்கும் இந்திய மருத்துவ மாணவர்கள் பத்திரமாக வெளியேற உதவியதற்காக போலந்து பிரதமருக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இரு தலைவர்களும் பாதுகாப்பு, வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்துகள், நகர்ப்புற உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளி ஆகிய முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு செய்தனர். மேலும், இரு நாடுகளிடையே திறமையான ஊழியர்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கான சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் கை்யெழுத்தானது.
இந்த சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி வெளியிட்ட ஊடக அறிக்கையில், ‘பிரதமர் டஸ்குடனான சந்திப்பில் முக்கிய முடிவுகளை எடுத்ததோடு, உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போர்கள் குறித்தும் ஆழ்ந்த கவலைகளை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டோர். எந்தவொரு மோதல்களிலும், அப்பாவி உயிர்களை இழப்பது மனிதகுலத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது.
போர்க்களத்தில் எந்த ஒரு பிரச்னையையும் தீர்க்க முடியாது என்பதை உறுதியாக நம்பும் இந்தியா, இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தனது அறிக்கையில், ‘இந்திய ராணுவத்தின் ஆயுதங்களை நவீனமயமாக்குவதில் பங்களிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உக்ரைன் போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதையடுத்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, நேற்றிரவு வார்சாவில் இருந்து சொகுசு ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் புறப்பட்டுச் சென்றார். தலைநகர் கீவ்வில் பிரதமர் மோடி இன்று உக்ரைன் அதிபர் வோலாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளார்.
* பயணம் 20 மணி நேரம் 7 மணி நேரம் தங்குவார்
உக்ரைனில் போர் காரணமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு, வான் வழிப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் உக்ரைன் அரசின் பிரத்யேக ‘டிரைன் போர்ஸ் ஒன்’ சொகுசு ரயிலில் பயணிப்பதே பாதுகாப்பான வழியாகும். ஏற்கனவே இந்த ரயில் மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் உக்ரைனுக்கு சென்று வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு செல்ல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதே ரயிலை பயன்படுத்தி வருகிறார். வார்சாவில் இருந்து விமானத்தில் 7 மணி நேரத்தில் கீவ் நகரை அடையலாம். இதுவே ரயிலில் 10 மணி நேரம் ஆகும். கீவ்வில் பிரதமர் மோடி 7 மணி நேரம் தங்கியிருப்பார். பின்னர் இன்று மீண்டும் அவர் அதே ரயிலில் 10 மணி நேரம் பயணித்து வார்சா வந்து அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புவார்.