கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் விஷ சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 19ம்தேதி 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 67 பேர் உயிரிழந்தனர். 161 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களிடம் அரசால் நியமிக்கப்பட்ட ஒருநபர் ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 29ம் தேதி வரை 86 பேரிடம், 31ம்தேதி முதல் நேற்று வரை மூன்று நாட்கள் நாள் ஒன்றுக்கு தலா 10 பேரிடம் விசாரணை நடத்தினார். மொத்தம் 124 பேரிடம் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணை நடத்தி முடித்து உள்ளார். அடுத்த கட்டமாக வரும் 5ம்தேதி முதல் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக 40 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.