பேரணாம்பட்டு : ஆந்திரா மாநிலம், குண்டூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து வேலூரில் உள்ள மார்க்கெட்டுக்கு 30 டன் எடையுள்ள சோளம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை ரேப்பல்லே கிராமத்தைச் சேர்ந்த ரபீக்(56) என்பவர் ஓட்டி வந்தார். பேரணாம்பட்டு அடுத்த வி.கோட்டா செல்லும் சாலையில் உள்ள பத்தலப்பள்ளி மலையில் 3வது வளைவில் வந்துகொண்டிருந்த போது திடீரென லாரியின் பிரோக் பழுதடைந்தது.
இதனை சுதாரித்த டிரைவர் ரபீக் லாரியை சாலையின் ஓரத்தில் உள்ள பாறைகள் மீது மோதி வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ரபீக், அவருடன் வந்த கிளீனர் சீனு(30) ஆகியோருக்கு லோசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கு விரைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன் ஆகியோர் போக்குவரத்தை சரி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.