வேலூர் : பொய்கை சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் வழக்கம் போல் நேற்று மாட்டுசந்தை கூடியது. உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. கடந்த சில நாட்களாக வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்தது.
இதனால் நேற்று நடந்த மாட்டுச்சந்தையில் அதிகளவில் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 700க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இதனால் வியாபாரம் களைக்கட்டியது. சுமார் ரூ.70 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பொய்கை மாட்டு சந்தையில் இன்று(நேற்று) கால்நடைகளின் வரத்து குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது. நேற்று காலை லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குறைந்தளவு கால்நடைகளே வந்துள்ளன. கடந்த சில வாரங்களாக மாடுகள் விலை குறைவாக இருந்தது. தற்போது கோடை மழை பெய்து வருவதால் மாடுகளின் விலை உயர்ந்துள்ளது. இன்று(நேற்று) நடந்த சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது’ என்றனர்.