பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவ மழை குறைந்த்துள்ளதால் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2 மாதத்திற்கு பிறகு அனுமதியளிக்கப்பட்டது. ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்திருந்து மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகமானதால், ஆழியார் அருகே உள்ள கவியருவில் தண்ணீர் வரத்தின்றி நின்று போனது. இதனால், அன்று முதல் சுமார் 5 மாதத்திற்கு மேலாக கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழை சில நாட்கள் பெய்தது. அதன்பின் தென்மேற்கு பருவமழையால் கவியருவிக்கு தண்ணீர் வரத்து வரத்துவங்கியது.
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீரோடை மற்றும் சிற்றருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆழியார் அறிவுத்திருக்கோயில் அருகே உள்ள சோதனைச்சாவடியிலிருந்து, சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்து கவியருவியில் தண்ணீர் ரம்மியமாக கொட்ட ஆரம்பித்தது. இதனால், கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதில் நேற்று சுதந்திர தின விடுமுறையையொட்டி, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து கவியருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கவியருவியில் குவிந்தனர். காலை முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்டநேரம் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர். மேலும், கவியருவி அருகே குளம்போல் தேங்கியிருந்த தண்ணீரிலும் குளித்து மகிழந்தனர். வெளியூர்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் வாகனங்கள், நவமலை செல்லும் வழியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், வால்பாறை ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.