பாகம் 10
பதிகமும், பாசுரமும் ஒன்றுக்கொன்று ஒட்டி விளங்கும் வகையில் சைவமும், வைணவமும் நம் தமிழ்த்திருநாட்டில் தழைத்தோங்கியிருக்கின்றன. இந்த இறுதிப் பாகத்தில் மேலும் சில தலங்களைத் தரிசிப்போம்.
28. திருஎவ்வுள் / திருப்பாச்சூர் / திருவாலங்காடு
திருஎவ்வுள் என்கின்ற திவ்ய தேசம் திருவள்ளூரைக் குறிக்கும். இது சென்னையிலிருந்து சுமார் 53 கி.மீ. தூரத்தில் உள்ளது. பெருமாள், வைத்திய வீரராகவராக சயனக் கோலத்தில் காட்சி அருள்கிறார்.
(திருமங்கை ஆழ்வர் 11, திருமழிசை ஆழ்வர்1).
சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம்
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம் பெருமான் எவ்வுள்
கிடந்தானே. (திருமங்கை ஆழ்வார், 1063)
‘‘தொண்டர்கள் பலரால் நெருங்கி வழி படப்படுபவரும், பக்தர்கள் சரணாகதி என்று புகலிடம் கோரப்படுபவரும், பக்தர்களுக்கு ஆப்தனாய் (நண்பனாய்) இருப்பவரும், செந்தாமரைக் கண் உடையவரும், ரிஷிகளால் மும்மூர்த்தியாக வழிபடப்படுபவரும் நம்பி (அரசன்)யாகிய பெருமாள் எவ்வுள்ளில் கிடந்தார்’’. இந்தப் பாசுரத்தில் பெருமாளே சிவன் என்ற உண்மையைத் திருமங்கை ஆழ்வார் உணர்த்துகிறார். திருவள்ளூர்ப் பெருமாளைச் சரணாகதி அடைந்தால் அவர் ஆப்தராய் அருள் செய்வார் என்று கூறுகிறார்.
திருவள்ளூருக்கு அருகில் 4 கி,மீ தூரத்தில் பாடல் பெற்ற திருப்பாச்சூரும் (சம்பந்தர் 11, அப்பர் 20), அடுத்து 18 கி.மீ. தொலைவில் திருவாலங்காடும் (சம்பந்தர் 11, அப்பர் 20, சுந்தரர் 10) உள்ளன. திருவாலங்காடு, சிவன் ஊர்த்வ தாண்டவம் ஆடிய தலம். காளியோடு நடனம் ஆடும் பொழுது இறைவன் காலைத் தூக்க, காளி தோல்வி அடைந்ததாக வரலாறு.
வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலும்
கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய வாலங்காட் டடிக ளாரே. (அப்பர் 4.68.1)
கூடினார் உமைதனோடே குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம் பைம்பொழில் பழனை மேயார்
ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிக ளாரே. (அப்பர் 4.68.8)
முதல் பாட்டில் அப்பர் ஆலங்காட்டு இறைவர், விரும்புபவர்களுக்கு எளியவராய், உள்ளத்திலே இறை தியானத்தால் நெகிழ்ந்து மகிழும் அடியவர்க்கு அன்பராய் அவர்களின் வினைகளின் மாசுகளைப் போக்குபவராய் விளங்குகிறார் என்கிறார். ‘‘இறைவன் உமையோடு எப்பொழுதும் இருப்பவர். மிகப் பெரிய கங்கை அவர் சடையில் உறிஞ்சப்பட்டது. அவர் சாமவேதம் பாடினார், பழையனூர் என்ற திருவாலங்காட்டில் உள்ளார். அங்கு அவர் காளி காண நடனம் ஆடினார்’’.
திருமங்கை ஆழ்வார், திருஎவ்வுள் பெருமாள் அன்பருக்கு அன்பராய் இருக்கிறார் என்று சொன்னது போலவே அப்பரும் ஆலங்காட்டு அடிகள் அன்பருக்கு அன்பராய் இருக்கிறார் என்று கூறுவதில், இவ்விருவரிடையேயான ஒற்றுமையை அறிந்து உவக்கலாம். அப்பர் எட்டாவது பதிகத்தில், திருவாலங்காட்டில் இறைவன் நடனம் ஆடிய தல புராணத்தை விளக்குகிறார். இறைவன் இவ்வாறு நடனம் புரிந்த இந்தத் தலம் ரத்தின சபை என்று அழைக்கப்படுகிறது. அப்பர் திருவாலங்காட்டைப் பழையனூர் என்று கூறுகிறார். பழையனூர் நீலி கதை மிகவும் பிரசித்தமானது. துரோகம் செய்த கணவனை நீலி பழி வாங்கியதாக வரலாறு.